இந்த ஆண்டு இறுதியில் 1,194 மகாடா வீடுகளுக்கான குலுக்கல் அதிகாரி தகவல்

இந்த ஆண்டு இறுதியில் 1,194 மகாடா வீடுகளுக்கான குலுக்கல் நடைபெறும் என மகாடா தலைவர் உதய் சமாந்த் கூறியுள்ளார்.

Update: 2018-09-29 22:45 GMT
மும்பை, 

இந்த ஆண்டு இறுதியில் 1,194 மகாடா வீடுகளுக்கான குலுக்கல் நடைபெறும் என மகாடா தலைவர் உதய் சமாந்த் கூறியுள்ளார்.

மகாடா வீடுகள்

மும்பை உள்ளிட்ட மாநிலம் முழுவதும் உள்ள பெருநகரங்களில், மராட்டிய வீட்டு வசதி வாரியமான மகாடா வீடுகளை கட்டி குறைந்த விலைக்கு விற்பனை செய்து வருகிறது. குறைந்த விலை என்பதால் மகாடா வீடுகளுக்கு பொதுமக்கள் இடையே அமோக வரவேற்பு உள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் மகாடா சார்பில் கட்டப்பட்ட 23 ஆயிரத்து 742 வீடுகளை வாங்க 14 லட்சத்து 13 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். விண்ணப்பித்து இருந்தவர்களில் மகாடா வீட்டின் பயனாளர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுகின்றனர். ஆண்டு தோறும் மகாடா வீடுகளுக்கான குலுக்கல் நடந்து வருகிறது.

1,194 வீடுகளுக்கான குலுக்கல்

இந்தநிலையில் இந்த ஆண்டு இறுதியில் 1,194 மகாடா வீடுகளுக்கான குலுக்கல் நடைபெற இருப்பதாக மகாடா தலைவர் உதய் சமாந்த் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

மும்பையில் 1,194 வீடுகள் கட்டும் பணி ஏறக்குறைய முடிந்துவிட்டது. இந்த வீடுகள் ரூ.16 லட்சம் முதல் ரூ.58 லட்சம் மதிப்பிலானவை. இந்த வீடுகளுக்கான குலுக்கல் ஆண்டு இறுதியில் நடத்தப்படும்.

புதிய வீடுகள் சயான் அண்டாப்ஹில், பிரதிக்சாநகர், மான்கூர்டு, விக்ரோலி தாகூர் நகர், காட்கோபர் பான்ட் நகர், செம்பூர் சகாகர்நகர், கோரேகாவ் சித்தார்த்நகர், பரேல் ஆகிய இடங்களில் கட்டப்பட்டவை ஆகும். எனவே இந்த வீடுகளுக்கு பொதுமக்களிடையே அதிகளவு வரவேற்பு இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்