சபரிமலை கோவிலில் பெண்களுக்கு அனுமதி: சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை வரவேற்கிறேன் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
சபரிமலை கோவிலுக்கு செல்ல பெண்களுக்கு அனுமதி வழங்கிய சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை வரவேற்கிறேன் என தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறி உள்ளார்.
கடத்தூர்,
தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று ஈரோடு மாவட்டம் கோபிக்கு வந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:–
தமிழக அரசை விமர்சித்து யாரும் பேசினால் அவர்களுடைய நாக்கை அறுப்பேன் என அ.தி.மு.க. அமைச்சர் ஒருவர் கூறியிருக்கிறார். அவர் நாவடக்கத்துடன் பேசவேண்டும்.
ஈரோடு மாவட்டத்தில் நல்ல மழை பெய்து உள்ளது. ஆனால் குளங்கள், ஏரிகள் நிரம்பவில்லை. ஏரி, குளங்களை தூர்வாருவதாக கூறி கொள்ளையடித்ததுதான் மிச்சம். முறையாக தூர்வாரி இருந்தால் இந்த மழையில் ஏரி, குளங்கள் நிரம்பி இருக்கும். இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு அதிக நன்மைகள் செய்தது, அப்போதைய காங்கிரஸ் மற்றும் தி.மு.க. அரசுகள். ஆனால் இலங்கை தமிழர்களுக்கு காங்கிரஸ், தி.மு.க. தான் இடைஞ்சல்கள் செய்ததாக அமைச்சர்களை வைத்து அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடத்தி பொய் பிரசாரம் செய்து வருகிறது. இது வருகிற பாராளுமன்ற தேர்தலில் எடுபடாது.
வருகிற பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தனித்து போட்டியிடும் என தம்பித்துரை கூறியுள்ளார். அவர் சொன்னதை போலவே அ.தி.மு.க. தனித்து நிற்க வேண்டும். அப்போதுதான் மக்கள் ஆதரவு யாருக்கு என்பது தெரியவரும்.
சபரிமலை கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என சுப்ரீம் கோர்ட்டு கூறிய தீர்ப்பை வரவேற்கிறேன். நாடு வளர்ச்சி அடைந்து உள்ள நிலையில் விண்வெளிக்கு ஆராய்ச்சி செய்ய ஆண்கள், பெண்கள் செல்கிறார்கள். ஆனால் சபரிமலை கோவிலுக்கு மட்டும் ஏன் பெண்கள் செல்லக்கூடாது?.
ரபேல் விமானம் வாங்கியதில் ஊழல் நடந்து உள்ளது. இதற்கு மோடி பதில் சொல்ல வேண்டும். கருணாஸ் மீதான நடவடிக்கை நியாயம்தான். அதேபோல் எச்.ராஜாவையும் போலீசார் கைது செய்ய வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயங்க அனுமதிக்கக்கூடாது. அதையும் மீறி இயக்கினால் ஜல்லிக்கட்டுக்கு நடந்த போராட்டம் போல் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும். ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகளை சோனியாகாந்தியும், ராகுல் காந்தியும் மன்னித்துவிட்டனர். எனவே என்னை பொறுத்தவரையில் அரசும், சட்டமும் என்ன செய்யவேண்டுமோ? அதை செய்யட்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளார்கள். இது வருகிற பாராளுமன்ற தேர்தலில் எதிர்க்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.