மாநகராட்சி மேயர் தேர்தலில் பா.ஜனதா தோல்வி எதிரொலி: பெங்களூரு பொறுப்பாளர் பதவியில் இருந்து அசோக் நீக்கமா?
மாநகராட்சி மேயர் தேர்தலில் பா.ஜனதா தோல்வி எதிரொலியாக பெங்களூரு பொறுப்பாளர் பதவியில் இருந்து அசோக்கை நீக்கி விட்டு ஷோபா எம்.பி.யை நியமிக்க தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
பெங்களூரு,
மாநகராட்சி மேயர் தேர்தலில் பா.ஜனதா தோல்வி எதிரொலியாக பெங்களூரு பொறுப்பாளர் பதவியில் இருந்து அசோக்கை நீக்கி விட்டு ஷோபா எம்.பி.யை நியமிக்க தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
மேயர் தேர்தலில் தோல்வி
பெங்களூரு மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயருக்கு நேற்று முன்தினம் நடந்த தேர்தலில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி வெற்றி பெற்றது. ஆபரேஷன் தாமரை மூலம் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) மற்றும் சுயேச்சை கவுன்சிலர்களை இழுக்க பா.ஜனதா முயற்சித்தது. ஆனால் ஆபரேஷன் தாமரை தோல்வியில் முடிந்ததுடன், பா.ஜனதாவுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தியது. பா.ஜனதா கட்சியின் பெங்களூரு நகர பொறுப்பாளராக, முன்னாள் துணை முதல்-மந்திரி அசோக் இருந்து வருகிறார்.
அவரது தலைமையில் தான் மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயர் தேர்தலை பா.ஜனதா எதிர் கொண்டது. இதனால் அவர், ஆபரேஷன் தாமரை மூலம் கவுன்சிலர்களை பா.ஜனதாவுக்கு இழுப்பதில் தோல்வி அடைந்தார். இந்த நிலையில், மாநகராட்சி மேயர், துணை மேயர் தேர்தலில் பா.ஜனதா தோல்வி அடையவும், கெட்ட பெயர் ஏற்பட அசோக் தான் காரணம் என்று பா.ஜனதா தலைவர்கள் குற்றச்சாட்டு கூறியுள்ளனர்.
அசோக் நீக்கமா?
குறிப்பாக பெங்களூருவை சேர்ந்த பா.ஜனதா எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.எல்.சி.க்கள் மாநகராட்சி மேயர் தேர்தலில் தோல்வி அடைய காரணமாக இருந்த அசோக் மீது கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இதுபற்றி மாநில தலைவர் எடியூரப்பாவிடம் அசோக் மீது அவர்கள் புகார் அளிக்க முன்வந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதே நேரத்தில் மாநகராட்சி மேயர் தேர்தலில் பா.ஜனதாவின் தோல்விக்கு காரணமான அசோக்கை, பெங்களூரு நகர பொறுப்பாளர் பதவியில் இருந்து நீக்க தலைவர்கள் வற்புறுத்தி வருவதாகவும் சொல்லப்படுகிறது.
மேலும் அசோக்கிற்கு பதிலாக பா.ஜனதாவின் பெங்களூரு நகர பொறுப்பாளராக ஷோபா எம்.பி.யை நியமிக்க வேண்டும் என்றும் தலைவர்கள் வலியுறுத்தி வருவதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக பெங்களூரு நகர பொறுப்பாளர் பதவியில் இருந்து அசோக் நீக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.