திருவள்ளூர் நகராட்சியில் கலெக்டர் ஆய்வு பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீரை வழங்கினார்

திருவள்ளூர் நகராட்சியில் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் ஆய்வு மேற்கொண்டார். பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீரை வழங்கினார்.;

Update: 2018-09-29 21:01 GMT
திருவள்ளூர், 

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் நேற்று திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட ஜெயாநகர் பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் அங்கு சாலையோரம் சுத்தம் செய்யும் பணிகளை பார்வையிட்டார். அங்குள்ள கழிவு நீர் கால்வாயை பார்வையிட்டு அந்த பகுதி முழுவதும் கால்வாயை சீரமைத்து முறையாக வைத்து கொள்ளவேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அப்போது கலெக்டர் அங்கிருந்த பொதுமக்களிடம் வீடுகளையும் ,சுற்றுப்புறத்தையும் தூய்மையாக பராமரிக்க வேண்டும் என்று அறிவுரைகளை வழங்கி பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீரை வழங்கினார்.

பின்னர் திருவள்ளூர் தாலுகா அலுவலக வளாகத்தில் சுத்தம் செய்யும் பணியையும் பார்வையிட்டார். அப்போது அவர் திருவள்ளூர் தாசில்தார் அலுவலக வளாகத்தில் நகராட்சியில் உள்ள அனைத்து பகுதிகளிலும் தூய்மையாக வைத்து கொள்ளவேண்டும் என அறிவுறுத்தும் விதமாக தூய்மை ரத வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அப்போது அவருடன் திருவள்ளூர் நகராட்சி ஆணையர் முருகேசன், திருவள்ளூர் தாசில்தார் தமிழ்ச்செல்வன், மண்டல துணை தாசில்தார் வெங்கடேஷ், சுகாதார அலுவலர் கோவிந்தராஜ், சுகாதார ஆய்வாளர் ரமேஷ் மற்றும் நகராட்சி பணியாளர்கள் பலர் உடன் இருந்தனர்.

ஊத்துக்கோட்டை

ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஆரணி ஆற்று கரையில் அமைக்கப்பட்டுள்ள ராட்சத ஆழ்துளை கிணறுகளில் இருந்து தண்ணீர் பெற்று மேல்நிலை தொட்டிகளுக்கு குழாய் மூலம் வினியோகிக்கப்படுகிறது. பருவ மழை தொடங்க உள்ளதால் தொற்று நோய்கள் வராமல் தடுக்கும் பணிகள் பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயகுமார் முன்னிலையில் நடைபெற்று வருகிறது. கழிவு நீர் கால்வாய்கள் தூர்ரவாரப்பட்டு, தெருக்களில் உள்ள சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் திருவள்ளூர் சப்-கலெக்டர் ரத்னா நேற்று திடீர் என்று ஊத்துக்கோட்டை சென்றார். பேரூராட்சியில் நடந்து வரும் டெங்கு ஒழிப்பு பணிகளை பார்வையிட்டார். பின்னர் தண்ணீர் பரிசோதகருடன் வீடு, வீடாக சென்று பேரூராட்சி மூலமாக வினியோகிக்கப்படும் குடிநீரின் தரத்தை ஆய்வு செய்தார். தாசில்தார் இளங்கோவன், பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயகுமார், வருவாய் ஆய்வாளர்கள் ரவி, ஜெகதீசன், அலுவலக தலைமை எழுத்தர் வாசுதேவன் மற்றும் பலர் சப்- கலெக்டர் ரத்னாவுடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்