மெட்ரோ ரெயில் பணிக்காக இடிக்கப்பட்ட கட்டிட இடிபாடுகளை அகற்றாததை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியல்
திருவொற்றியூரில், மெட்ரோ ரெயில் பணிக்காக இடிக்கப்பட்ட கட்டிட இடிபாடுகளை அகற்றாததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருவொற்றியூர்,
சென்னை வண்ணாரப்பேட்டை முதல் திருவொற்றியூர் விம்கோநகர் வரை மெட்ரோ ரெயில் விரிவாக்கப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக தேரடியில் உள்ள கடைகள் மற்றும் வீடுகள் கையகப்படுத்தப்பட்டு கடந்த 18-ந்தேதி ஜே.சி.பி. எந்திரங்கள் மூலம் இடிக்கப்பட்டன.
அவ்வாறு இடிக்கப்பட்ட கட்டிட இடிபாடுகள் அகற்றப்படாமல் அப்படியே கிடக்கிறது. இதனால் சாலையோரம் சிதறிக்கிடக்கும் செங்கல் மற்றும் ஜல்லி துகள்களால் பொதுமக்கள் அந்த வழியாக நடந்து செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். சில வீடுகளின் முன்பு இருந்த கடைகள் இடிக்கப்பட்டு இடிபாடுகள் அகற்றப்படாமல் இருப்பதால் அந்த வீட்டில் வசிப்பவர்கள் வெளி வந்து செல்ல முடியாமல் சிரமம் அடைந்து வருகின்றனர்.
மேலும் கட்டிட இடிபாடுகளில் உள்ள தூசுகள் காற்றில் பறந்து அருகில் உள்ள வீடுகளை சூழ்ந்து விடுகிறது. இதனால் வீடுகளில் இருக்கும் குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு இரவு நேரங்களில் தூங்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
சாலை மறியல்
கட்டிட இடிபாடுகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று மெட்ரோ ரெயில் நிர்வாகத்துக்கு பொதுமக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தனர். ஆனால் அவற்றை அகற்ற அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பாதிக்கப்பட்ட மக்கள், திருவொற்றியூர் தேரடி சந்திப்பில் நேற்று காலை மெட்ரோ ரெயில் அதிகாரிகளை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்துவந்த திருவொற்றியூர் போலீசார், மெட்ரோ ரெயில் அதிகாரிகளுடன் பேசி கட்டிட இடிபாடுகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.