சபரிமலை தீர்ப்புக்கு எதிராக தேவஸ்தானம் போர்டு மறுசீராய்வு மனு செய்வதை வரவேற்கிறேன் - எச்.ராஜா பேட்டி
மதுரை அழகரடியில் மதுரை நகர் மாவட்ட பா.ஜ.க. சார்பில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
மதுரை,
மதுரை நகர் மாவட்ட பா.ஜ.க. சார்பில் செயற்குழு கூட்டம் மதுரை அழகரடியில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சசிராமன் தலைமை தாங்கினார். தேசிய செயலாளர் எச்.ராஜா, மாநில துணைத்தலைவர் சுரேந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முன்னதாக தேசிய செயலாளர் எச்.ராஜா நிருபர்களிடம் கூறுகையில், மத்திய பா.ஜ.க. அரசின் திட்டங்கள் அனைத்து குடும்பங்களுக்கும் சென்றுள்ளது. முக்கியமாக கழிப்பறை வசதி திட்டம், குடியிருப்பு வீட்டு வசதி, முத்ரா வங்கி, பயிர் கடன் திட்டத்தில் 22 கோடி குடும்பங்கள் பயன்பெற்றுள்ளன. 2014–ல் பா.ஜ.க. 282 நாடாளுமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. வருகிற தேர்தலில் 350 தொகுதிகளில் வெற்றி பெறும், அதை யாராலும் தடுக்க முடியாது.
தினமும் பூஜை நடந்து வந்த கோவில்களை இந்து சமய அறநிலையதுறை கையில் எடுத்தது. தமிழகத்தில் உள்ள 38 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவில்களின் நிலையை அறநிலையத்துறை தெரியபடுத்த வேண்டும். சமீபத்தில் கூட சென்னையில் தொழில் அதிபர் வீட்டில் 81–க்கும் மேற்பட்ட சிலைகள், பழமையான தூண்கள் கைப்பற்றபட்டுள்ளது. தமிழக அமைச்சர் மாபா.பாண்டியராஜன் 2 ஆயிரம் சிலைகள் வெளிநாடுகளில் இருக்கிறது. ஆனால் அவைகள் மீட்கப்படாததற்கு காரணம் கோவில் சொத்துகளின் பதிவுகள் இல்லை, சரியான ஆவண பராமரிப்பு இல்லை என்கிறார். தொடர்ந்து கோவிலின் வருமானத்தை மட்டுமே எடுத்து கொள்ளும் இந்து சமய அறநிலையத் துறை, கோவில்களை பராமரிக்க மறுக்கிறது.
சபரிமலை தீர்ப்புக்கு எதிராக தேவஸ்தானம் போர்டு மறுசீராய்வு மனு செய்ய உள்ளதை வரவேற்கிறேன். அதில் நல்ல தீர்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன். கோவில்களில் நடக்கும் அக்கிரமங்களை தடுக்க கோவில் வாரியாக குழுக்கள் அமைக்க வேண்டும். எச்.ராஜா என்பவர் தனி மனிதன் அல்ல, எப்பொழுதும் பா.ஜ.க.வை சேர்ந்தவர் தான்.
இவ்வாறு அவர் கூறினார்.