தனியார் பங்களிப்புடன் மராமத்து பணி நடந்த ஆனைக்குட்டம் கண்மாய்க்கு தண்ணீர் வந்தது

தனியார் பங்களிப்புடன் மராமத்து பணி நடந்த ஆனைக்குட்டம் கடம்பன்குளம் கண்மாய்க்கு தண்ணீர் வர தொடங்கி உள்ளது. இதனால் கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2018-09-29 22:30 GMT

சிவகாசி,

சிவகாசி அருகே உள்ள ஆனைக்குட்டத்தில் கடம்பன்குளம் கண்மாய் உள்ளது. இந்த கண்மாயில் தேங்கும் நீரைக் கொண்டு அந்த பகுதியில் உள்ள 400–க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயன்பெற்று வந்தனர். இந்த கண்மாய்க்கு எம்.புதுப்பட்டி அருகில் உள்ள காளையார்குறிச்சி கண்மாயில் இருந்து நீர்வரத்து பாதை உள்ளது. இந்த நீர் வரத்து பாதையில் அதிகஅளவில் செடி, கொடிகள் வளர்ந்து நீர்வரத்து பாதையை ஆக்கிரமித்து இருந்தது. இதனை அகற்றினால் தான் வரும் காலங்களில் இந்த கண்மாய்க்கு எந்த தடையும் இல்லாமல் மழை தண்ணீர் வரும் என்று அந்த கிராம மக்கள் அதிகாரிகளிடம் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் கடம்பன்குளம் கண்மாயை மராமத்து செய்ய தேவையான நிதி உதவியை ஆஸ்திரேலியாவில் வசிக்கும் தமிழர்கள் செய்ய முன் வந்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் வளர்ச்சி இயக்க நிர்வாகிகள் உதவியுடன் ஆனைக்குட்டம் கடம்பன்குளம் கண்மாயை தூர்வாரும் பணியும், நீர் வரத்து பாதையில் உள்ள செடி, கொடிகளை அகற்றும் பணிகளும் நடந்தன. இதனை கடந்த 21–ந் தேதி மாவட்ட வருவாய் அலுவலர் உதயகுமார் தொடங்கி வைத்தார். பணிகள் முழு வீச்சில் நடந்தன.

இந்த நிலையில் நேற்று முன்தினம் சிவகாசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் மழை பெய்தது. இதை தொடர்ந்து களையார்குறிச்சி கண்மாயில் இருந்து கடம்பன்குளம் கண்மாய்க்கு தடையின்றி நேற்று காலை தண்ணீர் வந்தது. அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களும், விவசாயிகளும் நீண்ட நாட்களுக்கு பிறகு நீர் பெருகி வரும் கண்மாயை பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர். தொடர்ந்து மழை பெய்தால் கடம்பன்குளம் கண்மாய் முழுவதுமாக நிரம்ப வாய்ப்புள்ளதாக தாசில்தார் பரமானந்தராஜா தெரிவித்தார்.

மேலும் செய்திகள்