அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.45¼ லட்சம் மோசடி; வாலிபர் கைது

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.45 லட்சத்து 30 ஆயிரம் மோசடி செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2018-09-29 21:45 GMT

மதுரை,

மதுரை மாவட்டம் மேலக்கால் திருவேடகம் பகுதியை சேர்ந்தவர் முத்தையா(வயது 40). இவருக்கு புதூர் மாதா கோவில் தெருவை சேர்ந்த கணேசன்(36) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அப்போது கணேசன் தனக்கு அரசுத்துறை அதிகாரிகளுடன் தொடர்பு இருப்பதாகவும், அவர்கள் மூலம் பணம் கொடுத்து அரசு வேலை வாங்கி தரமுடியும் என்று கூறியுள்ளார்.

இதனை நம்பிய முத்தையா தனது மகனுக்கு அரசு வேலை வாங்கி தருமாறு கணேசனிடம் ரூ.33 லட்சத்தை கொடுத்துள்ளார். மேலும் அவரது நண்பர் அந்தோணிராஜ் என்பவரும் அரசு வேலைக்காக ரூ.15 லட்சம் கொடுத்தார். அவர்கள் 2 பேரிடமும் பணத்தை பெற்றுக் கொண்ட கணேசன், அதன்பிறகு வேலை வாங்கி தரவில்லை. மேலும் அவர்கள் வேலை குறித்து கேட்ட போது அவர் எந்தவொரு பதிலும் தெரிவிக்காமல் இழுத்தடித்து வந்துள்ளார்.

இதனால் முத்தையா, அவரது நண்பர் அந்தோணிராஜ் ஆகியோர் தாங்கள் கொடுத்த பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளனர். அப்போது கணேசன் ரூ.2 லட்சத்து 70 ஆயிரத்தை மட்டும் கொடுத்து விட்டு, மீதி பணத்தை கொடுக்காமல் அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.45 லட்சத்து 30 ஆயிரம் மோசடி செய்ததாக கணேசனை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்