திருவொற்றியூரில் பிரியாணி சாப்பிட்டதற்கு பணம் கேட்டதால் கடையை அடித்து நொறுக்கிய கும்பல்

திருவொற்றியூரில், பிரியாணி சாப்பிட்டதற்கு பணம் கேட்டதால் ஆத்திரத்தில் கடையை அடித்து நொறுக்கிய சட்டக்கல்லூரி மாணவர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2018-09-29 22:15 GMT
திருவொற்றியூர்,

திருவொற்றியூர் பூங்காவனபுரத்தைச் சேர்ந்தவர் நூர்முகமது. இவர், திருவொற்றியூர் வடக்கு மாடவீதியில் பிரியாணி கடை வைத்து உள்ளார். நேற்று முன்தினம் இரவு இவரது கடையில் 4 வாலிபர்கள் பிரியாணி வாங்கி சாப்பிட்டனர். அவர்கள் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

அவர்களிடம் நூர்முகமது, பிரியாணி சாப்பிட்டதற்கான பணத்தை தரும்படி கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த 4 பேரும், பிரியாணி கடையை அடித்து நொறுக்கி விட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டனர்.

4 பேர் கைது

இது குறித்து நூர்முகமது அளித்த தகவலின்பேரில் திருவொற்றியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது நூர்முகமதுவின் பிரியாணி கடையை அடித்து நொறுக்கிய அந்த வாலிபர்கள், அதே பகுதியில் உள்ள ஒரு கடையின் முன் நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளையும் அடித்து நொறுக்கினர்.

உடனே போலீசார் 4 பேரையும் கையும் களவுமாக பிடித்து போலீஸ் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர். அதில் அவர்கள், புதுவண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் (வயது 25), பார்த்திபன்(22), ருத்ர மணிகண்டன்(21), தமிழரசன்(22) என்பது தெரியவந்தது.

இதில் பார்த்திபன், ஆந்திராவில் உள்ள ஒரு சட்டக்கல்லூரியில் படித்து வரும் மாணவர் என்பது தெரிந்தது. இதுபற்றி திருவொற்றியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிதம்பரம் முருகேசன் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரியாணி கடையை அடித்து நொறுக்கியதாக 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்