‘பீரோ புல்லிங்’ கொள்ளையன் குண்டர் சட்டத்தில் கைது
‘பீரோ புல்லிங்’ கொள்ளையன் நாகமணி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
சென்னை,
சென்னையில் திறந்து கிடக்கும் ஜன்னல் அருகே வீட்டில் இருக்கும் பீரோக்களை சுருக்கு கயிறு போட்டு இழுத்து அவற்றை திறந்து அதற்குள் இருக்கும் நகைகளை பிரபல கொள்ளையன் நாகமணி (வயது 42) திருடி வந்தார்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள என்.ஆர்.பேட்டையை சேர்ந்த இவர் சென்னை புறநகர் பகுதிகளில் 450-க்கும் மேற்பட்ட வீடுகளில் ஜன்னல் ஓரம் இருக்கும் பீரோக்களை இழுத்து கொள்ளையடித்தார். இதனால் இவரை ‘பீரோ புல்லிங்’ கொள்ளையன் என்று போலீசார் அழைத்தனர். இவரை கைது செய்து ஆயிரம் பவுனுக்கு மேல் தங்க நகைகளை போலீசார் மீட்டனர். ஜெயிலுக்கு அனுப்பப்பட்ட நாகமணி ஜாமீனில் வெளிவந்து மீண்டும் கைவரிசையை காட்ட ஆரம்பித்தார்.
அவரை சமீபத்தில் சென்னை கானத்தூர் போலீசார் மீண்டும் கைது செய்தனர். நாகமணியை குண்டர் சட்டத்தில் 1 ஆண்டு சிறையில் அடைக்க போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நேற்று உத்தரவிட்டார். அதன்பேரில் நாகமணி புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
நாகமணியைப் போல் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்ட மேலும் 11 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க நேற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.