செங்கோட்டை கலவரத்தில் இந்துக்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் பா.ஜனதா கூட்டத்தில் தீர்மானம்
செங்கோட்டையில் நடந்த கலவரத்தில் இந்துக்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என பாரதீய ஜனதா கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நெல்லை,
செங்கோட்டையில் நடந்த கலவரத்தில் இந்துக்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என பாரதீய ஜனதா கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
செயற்குழு கூட்டம்
பா.ஜனதாவின் நெல்லை கிழக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நெல்லை சந்திப்பில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் தயா சங்கர் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் சுரேஷ் முன்னிலை வகித்தார். தச்சை மண்டல தலைவர் கார்த்திகேயன் வரவேற்று பேசினார். மாநில துணை தலைவர்கள் காந்தி, நாகராஜன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்
செங்கோட்டையில் விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது நடந்த கலவரத்தில் இந்துக்கள் தாக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக இந்துக்கள் மீது பொய் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை போலீசார் வாபஸ் பெற வேண்டும்.
பணகுடியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் நீண்ட நாள் கோரிக்கை வைத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று ரூ.56 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, பணிகளை உடனடியாக தொடங்க உத்தரவிட்ட மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனுக்கு இந்த கூட்டம் பாராட்டு தெரிவிக்கிறது.
அரசு விழாவாக...
நாடு முழுவதும் வாழும் ஏழை, எளிய மக்களுக்கு இலவச மருத்துவ காப்பீட்டு திட்டம் அறித்த பிரதமர் நரேந்திர மோடியை இந்த கூட்டம் பாராட்டுகிறது. 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் தாமிரபரணி புஷ்கர விழா வருகிற 11-ந் தேதி தொடங்கி 22-ந் தேதி முடிவடைகிறது. இந்த விழாவை அரசு விழாவாக நடத்த வேண்டும்.
தாமிரபரணி ஆற்றை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மழை காலங்களில் அனைத்து குளங்களுக்கும் தண்ணீர் நிரப்ப மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், விவசாய அணி மாநில பொதுச்செயலாளர் கணேஷ்குமார் ஆதித்தன், மாவட்ட செயலாளர் முத்துபலவேசம், துணை தலைவர் அழகுராஜ், பொதுச்செயலாளர்கள் தமிழ்செல்வன், கணேஷ், கோட்ட அமைப்பு செயலாளர் கிருஷ்ணன், இளைஞர் அணி மாநில பொதுச்செயலாளர் வேல் ஆறுமுகம், மாவட்ட பொருளாளர் பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.