தமிழகத்தில் 12 இடங்களில் தாமிரபரணி மகா புஷ்கர விழிப்புணர்வு ரத யாத்திரை விசுவ இந்து பரிஷத் அமைப்பாளர் தகவல்
தாமிரபரணி புஷ்கர விழாவை முன்னிட்டு தமிழகத்தில் 12 இடங்களில் விழிப்புணர்வு ரத யாத்திரை நடைபெற இருப்பதாக விசுவ இந்து பரிஷத் அமைப்பாளர் சேதுராமன் தெரிவித்தார்.;
நெல்லை,
தாமிரபரணி புஷ்கர விழாவை முன்னிட்டு தமிழகத்தில் 12 இடங்களில் விழிப்புணர்வு ரத யாத்திரை நடைபெற இருப்பதாக விசுவ இந்து பரிஷத் அமைப்பாளர் சேதுராமன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் நெல்லையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
விழிப்புணர்வு ரத யாத்திரை
தாமிரபரணி புஷ்கர விழாவை முன்னிட்டு விசுவ இந்து பரிசத் சார்பில் தமிழகத்தில் 12 ராசிகளுக்கு 12 இடங்களில் உள்ள நதிகளில் இருந்து விழிப்புணர்வு ரத யாத்திரைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த யாத்திரையானது வருகிற 8-ந் தேதி பிரசித்தி பெற்ற கோவில்களில் இருந்து தொடங்கி, 10-ந் தேதி அன்று நெல்லையை வந்தடைகிறது. இந்த யாத்திரைக்கு சங்கர் நகரில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. வரவேற்பில் துறவிகள், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்கின்றனர். இந்த யாத்திரைக்கு நெல்லையப்பர் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. பின்னர் அன்று இரவு பாபநாசத்திற்கு யாத்திரை செல்கிறது. பின்னர் மறுநாள் 11-ந் தேதி கலச தீர்த்தங்கள் தாமிரபரணி ஆற்றில் சுவாமிகள் மூலம் சங்கமிக்கின்றன.
சாதுக்கள் ஊர்வலம்
12-ந் தேதி நெல்லையில் சாதுக்கள் ஊர்வலம் மற்றும் தாமிரபரணி மகா ஆரத்தி விழாவும், 20-ந் தேதி பாபநாசத்தில் கிராம கோவில் பூசாரிகள் மாநாடும், 21-ந் தேதி பாளையங்கோட்டை சாரதா மகளிர் கல்லூரியில் மகளிர் மாநாடு மற்றும் கலச பூஜையும் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் புஷ்கர விழா தொடர்பான சிறப்பு மலரும் வெளியிடப்படுகிறது.
இந்த நிகழ்ச்சிகளுக்கு அரசு அனைத்து விதமான ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். தைப்பூச மண்டபத்தில் விழாவை நடத்திட அறநிலையத்துறையும், தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகமும் அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.