கடையநல்லூரில் வாலிபர் மர்ம சாவு உறவினர்கள் சாலை மறியல்

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகே கம்பனேரியை சேர்ந்த மணிகண்டன் (வயது 27).

Update: 2018-09-29 21:30 GMT
கடையநல்லூர், 

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகே கம்பனேரியை சேர்ந்த மணிகண்டன் (வயது 27). 

இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சேர்ந்தமரம் சாலையில் மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த அதே ஊரைச் சேர்ந்த பிரேம்குமார் ஓட்டி வந்த மோட்டார்சைக்கிளும், மணிகண்டனின் மோட்டார்சைக்கிளும் மோதிக் கொண்டன. அப்போது இதுதொடர்பாக அவர்களுக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.

அக்கம்பக்கத்தினர் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இந்த முன்விரோதம் காரணமாக சம்பவத்தன்று ஊரில் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கடையநல்லூர் போலீசில் மணிகண்டன் மீது பிரேம்குமார் புகார் கொடுத்துள்ளார். இதனால் போலீசுக்கு பயந்து மணிகண்டன் தனது மனைவி ஊரான புளியரைக்கு சென்றார். அங்கு திடீரென உடம்பு வலிப்பதாக கூறியுள்ளார். உடனே அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவரை சேர்த்துள்ளனர். அங்கு பரிசோதித்த போது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர் கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி கார்த்திகா, இதுபற்றி கடையநல்லூர் போலீசில் நேற்று முன்தினம் இரவு புகார் செய்தார். இதையடுத்து போலீசார் அவருடைய உடலை கைப்பற்றி கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்தநிலையில் நேற்று காலை கார்த்திகா தனது 6 மாத கைக்குழந்தை மற்றும் உறவினர்களுடன், திடீரென மதுரை- தென்காசி மெயின் ரோட்டில் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.

அவருடைய சாவில் மர்மம் உள்ளது. இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் கடையநல்லூர் தாசில்தார் தங்கராஜ் மற்றும் கடையநல்லூர் போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார் பிரேத பரிசோதனையில் அவர் எப்படி இறந்தார்? என தெரியவரும். 

அதன் பின்னர் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதை தொடர்ந்து அவர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்