புஷ்கர விழாவை முன்னிட்டு ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றின் படித்துறையில் கலெக்டர் ஆய்வு

புஷ்கர விழாவை முன்னிட்டு ஸ்ரீவைகுண்டத்தில் தாமிரபரணி ஆற்றின் படித்துறைகளை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆய்வு செய்தார்.;

Update: 2018-09-29 22:30 GMT
ஸ்ரீவைகுண்டம், 

புஷ்கர விழாவை முன்னிட்டு ஸ்ரீவைகுண்டத்தில் தாமிரபரணி ஆற்றின் படித்துறைகளை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆய்வு செய்தார்.

புஷ்கர விழா

தாமிரபரணி ஆற்றில் புஷ்கர விழா நடைபெற உள்ளது. விழா நாட்களில் தாமிரபரணி ஆற்றில் பல லட்சம் பக்தர்கள் புனித நீராடுவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் 6 இடங்களில் தாமிரபரணி புஷ்கர விழா நடக்கிறது. இதற்காக தயாராகி வரும் படித்துறைகளை நேற்று மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி நேரில் சென்று ஆய்வு செய்தார்.

ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி கோவில் பின்புறத்தில் உள்ள திருமஞ்சன படித்துறையில் ஆழம் அதிகமாக இருப்பதால் அங்கு பக்தர்கள் நீராட தடை விதிக்க வேண்டும் என்றும், அதற்கு மாற்றாக பஸ் நிலையம் பின்புறத்தில் உள்ள படித்துறை மற்றும் அதன் அருகே உள்ள இடம் சுத்தம் செய்து வருவதை பார்வையிட்டார்.

அப்போது சுகாதார துறையினரிடம், இங்கு நீராட வரும் பக்தர்களுக்கு உதவிடும் வகையில் ஆங்காங்கே முகாம்கள் அமைக்கப்பட வேண்டும். பக்தர்கள் உடை மாற்றும் இடம், கழிப்பிட வசதி உள்ளிட்டவைகளை அமைத்து கொடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

ஆழ்வார்திருநகரி

அதன் பின்னர் கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆழ்வார்திருநகரியில் உள்ள சங்கணி படித்துறையை ஆய்வு செய்தார். புனித நீராட வரும் பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அதற்கான ஏற்பாடுகளை செய்ய அதிகாரிகளுக்கு வலியுறுத்தினார். அதன் பின்னர் ஏரல் அருணாசல சுவாமி ஆற்றங்கரை பகுதியை பார்வையிட்டார்.

இந்த ஆய்வின் போது, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா, உதவி கலெக்டர்கள் பிரசாந்த், கோவிந்தராசு, உதவி கலெக்டர் (பயிற்சி) அனு, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தனபதி, ஊராட்சிகளின் உதவி இயக்குனர் உமாசங்கர், பேரூராட்சி உதவி இயக்குனர் மாகின் அபுபக்கர், தாசில்தார் மலர்தேவன், ஆழ்வார்திருநகரி பஞ்சாயத்து யூனியன் ஆணையாளர் சிவராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர் சுடலை, நிர்வாக அதிகாரி பாலசுப்பிரமணியன், ஏரல் வருவாய் ஆய்வாளர் முத்துலட்சுமி, சிறுத்தொண்டநல்லூர் கிராம நிர்வாக அதிகாரி மணிகண்டன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் சந்திரன், வட்டார மருத்துவ அலுவலர் கல்யாணராமன், சுகாதார ஆய்வாளர் ரட்சகன், ஸ்ரீவைகுண்டம் அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் காளியப்பன், சுகாதார துணை இயக்குனர் பாலசுப்பிரமணியன், ஸ்ரீவைகுண்டம் நகர பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி சந்திரவேல், அண்ணா பல்கலைக்கழக நெல்லை மண்டல டீன் சக்திநாதன், முன்னாள் போலீஸ் ஐ.ஜி. மாசாணமுத்து ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்