குன்னூர்– கேத்தி இடையே நிலக்கரி நீராவி என்ஜின் சோதனை ஓட்டம் வெற்றி

குன்னூர்– கேத்தி இடையே நிலக்கரி நீராவி என்ஜின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்தது.

Update: 2018-09-29 22:45 GMT

குன்னூர்,

நீலகிரி மாவட்டத்திற்கு பெருமை சேர்ப்பதாக மலை ரெயில் உள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் நீலகிரி மலை ரயில் இயக்கம் தொடங்கப்பட்டது. மலை ரெயில் 1899– ம் ஆண்டு ஜூன் மாதம் 15–ந் தேதி பொதுமக்களுக்காக மேட்டுப்பாளையம்– குன்னூர் இடையே இயக்க அர்ப்பணிக்கப்பட்டது. 1903–ம் ஆண்டு ஜனவரி மாதம் 1–ந் தேதி இந்திய அரசு மலை ரெயில் சேவையை எடுத்துக் கொண்டது.

இதைத்தொடர்ந்து குன்னூர் –ஊட்டி இடையே 1908–ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15–ந் தேதி முதல் மலை ரெயில் இயக்கப்பட்டது. 1914–ம் ஆண்டு சுவிட்சர்லாந்தில் உருவாக்கப்பட்ட நிலக்கரி நீராவி என்ஜின் 1918–ம் ஆண்டு தென்னக ரெயில்வேயில் இணைக்கப்பட்டது. அந்த காலகட்டத்தில் மலை ரெயில் அனைத்தும் நிலக்கரி நீராவி என்ஜின் மூலம் இயக்கப்பட்டது.

இதையடுத்து பல்வேறு காரணங்களால் 2000–ம் ஆண்டு முதல் நீராவி என்ஜின் இயக்கம் நிறுத்தப்பட் டது. 37384 என்ற எண் கொண்ட நூற்றாண்டை கடந்த நீராவி என்ஜின் மேட்டுப்பாளையத்தில் நிறுத் தப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் பாரம்பரிய நீராவி ரத அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் நடராஜன், பழமை வாய்ந்த நீராவி என்ஜினை காட்சி பொருளாக வைக்க கூடாது. சுற்றுலா பயணிகளின் நலனுக்காக மேட் டுப்பாளையம் –குன்னூர் இடையே இயக்க வேண்டும் என்று ரெயில்வே வாரியத்திடம் வலியுறுத்தினார். அதன்பேரில் நிலக்கரி நீராவி என்ஜினை இயக்க ரெயில்வே வாரியம் அனுமதி வழங்கியது.

இதைத்தொடர்ந்து நூற்றாண்டை கடந்த நிலக்கரி நீராவி என்ஜின் சோதனை ஓட்டம் நேற்று குன்னூர் ரெயில் நிலையத்தில் தொடங்கியது. இதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் கொண்டு வரப்பட்ட நிலக்கரி நீராவி என்ஜின் குன்னூர் லோகோ பணிமனையில் இருந்து 2 பெட்டிகள் இணைக்கப்பட்டு முதல் பிளாட்பாரத்திற்கு கொண்டு வரப்பட்டது.

அப்போது பாரம்பரிய நீராவி ரத அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் நடராஜன் நூற்றாண்டு பழமை வாய்ந்த என்ஜினை தொட்டு வணங்கினார். நேற்று மதியம் 12.55 மணிக்கு நிலக்கரி நீராவி என்ஜின் சோதனை ஓட்டமாக குன்னூர்– ஊட்டி இடையே இயக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி நீராவி என்ஜின் புறப்பட்டு கேத்தி ரெயில் நிலையம் வரை வெற்றிகரமாக சென்றடைந்தது.

சோதனை ஓட்டம் வெற்றிகரமாக இருந்ததால் ஊட்டி வரை இயக்கும் திட்டம் மாற்றப்பட்டது. அதன்படி கேத்தியில் மீண்டும் குன்னூருக்கே நிலக்கரி நீராவி என்ஜின் வந்தடைந்தது. சோதனை ஓட்டம் வெற்றிகரமாக அமைந்ததால் ரெயில்வே ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மேலும் செய்திகள்