கோவையை அடுத்த பெரிய தடாகத்தில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் பயன்படுத்திய பொருட்கள் கிடைத்தன

கோவையை அடுத்த பெரிய தடாகத்தில் செங்கல் சூளைக்கு பள்ளம் தோண்டிய போது, 2,500 ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் பயன்படுத்திய பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

Update: 2018-09-29 23:00 GMT

கோவை,

கோவையில் இருந்து 15 கிலோமீட்டர் தூரத்தில் பெரிய தடாகம் என்ற கிராமம் உள்ளது. 2,500 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது சங்க இலக்கிய காலத்திற்கு முற்பட்ட வரலாற்றுக் காலத்து மக்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் பெரிய தடாகத்தில் கண்டறியப்பட்டுள்ளன.

 இதுகுறித்து தகவல் கிடைத்ததும் கோவை பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லூரியின் கல்வெட்டியல் பட்டயப் படிப்பு பொறுப்பு ஆசிரியர் ரவி தலைமையில் மாணவர்கள் அங்கு களப்பணி மேற்கொண்டனர். இதில் 15–க்கும் மேற்பட்ட பெரிய கற்களை கொண்டு உருவாக்கப்பட்ட கல்லறைகள், முதுமக்கள் தாழிகள், மணி அணிகலன்கள் ஆகியவை சிதைந்த நிலையில் இருப்பது கண்டறியப்பட்டன. இதுகுறித்து பொறுப்பு ஆசிரியர் ரவி கூறியதாவது:–

கடந்த சில நாட்களுக்கு முன்பு பெரிய தடாகத்தில் 50 அடி நீளம், 150 அடி அகலத்தில் செங்கல் சூளை அமைப்பதற்காக அருகருகே இரண்டு இடங்களில் பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது மண்ணில் புதைந்திருந்த 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட 15–க்கும் மேற்பட்ட பெரிய கற்களால் ஆன கல்லறைகள் மற்றும் முதுமக்கள் தாழி ஆகியவை இருப்பது கண்டறியப்பட்டன.

தமிழகத்தின் வடபகுதியில் கல்திட்டை மற்றும் கல்பதுக்கை (இறந்தவர்களுக்கு நினைவுச் சின்னம்)அமைக்கும் பழக்கமும், தமிழகத்தின் தென்பகுதியில் முதுமக்கள் தாழி அமைக்கும் பழக்கமும் இருந்துள்ளன. ஆனால் பெரிய தடாகத்தில் வாழ்ந்த மக்கள் இந்த இரண்டு நாகரிகப் பண்பாடுளையும் இணைந்த காலத்தில் வாழ்ந்துள்ளனர்.

ஒரு குடும்பத்தில் ஒருவர் இறந்தால் அவருடைய எலும்புகள் மற்றும் அவர் பயன்படுத்திய பொருட்களை பள்ளம் தோண்டி பெரிய கற்களால் ஆன அறைகளை செவ்வக வடிவில் அமைத்து அதில் வைத்து வழிபாடு நடத்தியுள்ளனர். இவற்றிற்கு கல்பதுக்கை என்று பெயர். அவை ஒரு அறையாகவும் அல்லது இரண்டு, மூன்று என ஆறு அறைகள் உடைய கல்லறைகளாகவும் இருந்துள்ளன. சில அறைகளில் முதுமக்கள் தாழிகளும் உடைந்து காணப்படுகின்றன. முதுமக்கள் தாழி என்பது பெரிய பானையில் இறந்தவர்களை அமர வைத்து பூமிக்குள் புதைக்கும் வழக்கம் ஆகும். மேலும் இறந்தவர்களுக்கு சில சடங்குகளோடு வழிபாடு நடத்தப்படுகின்ற வழக்கத்தை இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ள பொருட்களில் இருந்தும் கண்டறிய முடிகிறது.

மேலும் வட்ட சில்லுகள் கொண்டு அக்கால இளைஞர்கள் விளையாடி இருப்பதும் கல்மணிகளைப் பயன்படுத்தி உயர் தொழில்நுட்பத்துடன் ஆபரணங்களைத் தயாரித்திருப்பதும் கண்டறியப்பட்டுள்ளன. உலோகத்தால் செய்யப்பட்ட மணிகளும் கிடைத்திருக்கின்றன. நீலநிற மணி, மாவுக்கல் மணி, அரக்குமணி உள்பட பல்வேறு மணிகளை அக்கால மக்கள் அணிந்து மகிழ்ந்திருக்க வேண்டும். அணிகலன் அணியும் பழக்கத்தில் இவர்கள் நாகரிகத்தில் முன்னேறியவர்களாக இருந்துள்ளனர். பிறை வடிவில் மேற்பகுதி அகலமாகவும் நுனிப்பகுதிக் கூர்மையாகவும் இருக்கும் கற்களால் ஆன கருவிகளும் கிடைத்துள்ளன. இவை விலங்குகளின் தோல்களைக் கிழிப்பதற்குப் பயன்படுத்தி இருக்கலாம்.

ஒரு கல்லறையின் முகப்புப் பகுதியில் அமைக்கப்பட்ட இடுதுளை இறந்த மனிதனுடைய ஆவி வெளியே சென்று உள்ளே வந்து தங்கும் என்கிற ஆவி வழிபாட்டை நினைவுபடுத்துவதாக உள்ளது. இறந்தோரின் உடலை அல்லது எஞ்சிய பகுதிகளை பானையில் வைத்து பூமிக்குள் பள்ளம் தோண்டி புதைத்துள்ளனர். இறந்த மனிதன் மீண்டும் கருவில் இடம்பெறுவான் என்ற நம்பிக்கையை இது காட்டுகிறது. கருவுற்ற வயிறு பானை வடிவில் உருவகப்படுத்தப்பட்டுள்ளது. எனவே கருவுற்ற வடிவில் ஈம தாழிகள் வடிவமைக்கப்பட்டதாக கூறமுடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்