சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பால் அய்யப்ப பக்தர்கள் அதிர்ச்சி - பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

‘சபரிமலை கோவிலுக்கு பெண்கள் செல்ல அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர் என்று கோவையில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

Update: 2018-09-29 23:45 GMT

கோவை,

மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நேற்றுக்காலை ரெயில் மூலம் கோவை வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

சபரிமலை அய்யப்பன் கோவில் வழிபாட்டு முறைகள் பாரம்பரியமாக அப்படியே கடைபிடிக்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது. ஆனால் பெண்கள் செல்ல அனுமதித்த சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அய்யப்ப பக்தர்களுக்கு, பெரும் ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளதை அறிய முடிகிறது. தேவசம்போர்டு மேல்முறையீடு செய்ய முடிவு செய்து இருப்பதாக அறிகிறேன். பாரம்பரியம் காப்பாற்றப்பட வேண்டும் என்பதே மக்களின் எண்ணமாக இருக்கிறது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு முடிவு செய்ய எதுவுமில்லை. மாநில அரசுதான் இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் பா.ஜனதாவை மையப்படுத்தியே அனைத்து அரசியலும் நடைபெற்று வருகிறது. இதை அனைத்து அரசியல் கட்சிகளும் உணர்ந்து இருக்கின்றன. இதன் மூலம் தமிழக அரசியலில் பா.ஜனதா மைய புள்ளியாக இருந்து வருகிறது. அ.தி.மு.க.வினர், தி.மு.க. பின்னணியில் பா.ஜனதா இருக்கிறது என்றும், தி.மு.க.வினர் அ.தி.மு.க. பின்னணியில் பா.ஜனதா இருக்கிறது என்றும் மாறி மாறி சொல்கின்றனர். ஆனால் நாங்கள் எந்த கட்சிக்கு பின்னாலும் இருந்து செயல்படவில்லை. அனைவருக்கும் முன்னோடியாக இருந்து வருகிறோம்.

அடுத்த ஆண்டு வரும் பாராளுமன்ற தேர்தல் ஜுரம் காரணமாக ரபேல் ஊழல் குற்றச்சாட்டு பெரிதுபடுத்தப்படுகிறது. ரபேல் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக துறை மந்திரிகள் விளக்கம் அளித்து வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்