புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யாவிட்டால் போராட்டம்; அரசு அலுவலர் ஒன்றிய மாநில தலைவர் பேட்டி

‘புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யாவிட்டால் போராட்டம் நடத்தப்படும்’ என்று தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில தலைவர் இரா.சண்முகராஜன் கூறினார்.

Update: 2018-09-29 22:45 GMT

கோவை,

தமிழ்நாடு கருவூல கணக்குத்துறை அலுவலர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்தல் கோவை ராம்நகரில் உள்ள எஸ்.என்.வி. கல்யாண மண்டபத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாநில தலைவர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் பிரபு வரவேற்றார். கூட்டத்தில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில தலைவர் இரா.சண்முகராஜன், மாவட்டத் தலைவர் ப.தேசிங்குராஜன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். அதன்பின்னர் மாநில தலைவர் இரா.சண்முகராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:–

தமிழக அரசில் அரசு ஊழியர்கள், சிறப்பு காலமுறை ஊதியம், தொகுப்பூதியம் பெறும் ஊழியர்கள் உள்பட 15 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிகிறார்கள். அதில் 2 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஒவ்வொரு அரசு துறையிலும் மக்கள் நலத் திட்டங்கள் அதிக அளவில் செயல்படுத்தப்படுகின்றன. அவற்றை நிர்வகிப்பதில் அரசு ஊழியர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். ஆனால் ஆள் பற்றாக்குறையால் குறைந்த ஊழியர்களை கொண்டு மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றுவதால் வேலை பளு அதிகமாகிறது. எனவே வேலை பளுவை குறைக்கும் வகையில் தமிழக அரசில் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். அரசு பணியிடங்களை குறைப்பதையும் தமிழக அரசு கைவிட வேண்டும்.

புதிதாக பணியில் சேர்ந்தவர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படுகிறது. 30 ஆண்டுகளுக்கு மேல் அரசு பணி செய்து ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு அளிக்கும் ஓய்வூதியம் என்பது பிச்சை அல்ல. அவர்களுக்கு அளிக்கப்படும் சமூக அந்தஸ்து. எனவே புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இதுதொடர்பாக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசியுள்ளேன். அவர் இந்த இரண்டு கோரிக்கைகளையும் நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்துள்ளார். அப்படி அந்த கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் அரசு ஊழியர்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக நடந்த கருவூல கணக்குத்துறை அலுவலர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–

கூடுதல் கருவூல அலுவலர் பணியிடங்களின் எண்ணிக்கையை அதிகரித்து பதவி உயர்வு வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். காலியாக உள்ள இளநிலை உதவியாளர், கணக்கர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். அனைத்து சார் கருவூலங்களுக்கும் காலமுறை ஊதியத்தில் இரவு காவலர்கள் நியமிக்கலாம்.

ஒரு தாலுகா, ஒரு கருவூலம் என்ற அரசின் கொள்ளை முடிவுக்கு ஏற்ப புது வட்டங்களில் புது சார் கருவூலம் தோற்றுவிக்கலாம். தகுதி பெற்ற அலுவலக உதவியாளர், பதிவறை எழுத்தர்கள் அனைவரும் இளநிலை உதவியாளர் பதவி உயர்வு பெற்றிடும் வகையில் விதிகளை தளர்வு செய்ய வேண்டும். கோவை மாவட்ட கருவூலத்திற்கு தனியாக புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், நிர்வாகிகள் ரோசன் ராஜ், வெங்கடராகவன், சவுந்திரராஜன், முரளி, மாவட்ட செயலாளர் சற்குணன், பொருளாளர் கவுரி சங்கர், மாவட்ட இணை செயலாளர் எம்,மோகன்தாஸ், ஒருங்கிணைப்பாளர் ராஜரத்தினம் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் தேர்தலும் நடந்தது.

மேலும் செய்திகள்