கடனை செலுத்தும்படி விவசாயிகளுக்கு நெருக்கடி கொடுத்தால் வங்கி அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை குமாரசாமி எச்சரிக்கை

கடனை செலுத்தும்படி விவசாயிகளுக்கு நெருக்கடி கொடுத்தால் வங்கி அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்-மந்திரி குமாரசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2018-09-29 23:30 GMT
பெங்களூரு, 

கடனை செலுத்தும்படி விவசாயிகளுக்கு நெருக்கடி கொடுத்தால் வங்கி அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்-மந்திரி குமாரசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வேலை வாய்ப்பு முகாம்

கர்நாடக அரசு சார்பில் பெங்களூரு பசவனகுடி நேஷனல் கல்லூரி மைதானத்தில் வேலை வாய்ப்பு முகாம் நேற்று தொடங்கியது. இந்த முகாம் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இந்த முகாமில் 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. வேலை வாய்ப்பு முகாமை நேற்று காலையில் முதல்-மந்திரி குமாரசாமி தொடங்கி வைத்து பேசியதாவது:-

அரசு சார்பில் நடைபெறும் இந்த வேலை வாய்ப்பு முகாம் பெயரளவுக்கு நடத்தப்படவில்லை. இந்த வேலை வாய்ப்பு முகாம் மூலம் கண்டிப்பாக வேலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். வேலை கிடைப்பதும் உறுதி. மாநிலத்தில் உள்ள அனைத்து மக்களையும் நிம்மதியாக வாழ வைப்பது இந்த அரசின் கடமையாகும்.

மாவட்டத்தில் ஒரு லட்சம் பேருக்கு...

ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கமாகும். அதற்கான நடவடிக்கையில் அரசு இறங்கியுள்ளது. இந்த அரசு எப்போது வேண்டுமானாலும் கவிழலாம் என்று சொல்கிறார்கள். ஆனால் கூட்டணி அரசுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. 5 ஆண்டுகளும் கூட்டணி ஆட்சி சிறப்பாக நடைபெறும். இங்கு வந்திருப்பவர்கள் தங்களுக்கு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வந்துள்ளனர். அவர்களது நம்பிக்கை வீண் போகாது. வேலை வாய்ப்பு முகாமுக்கு வந்துள்ள பல்வேறு நிறுவனங்களை வரவேற்கிறேன்.

ஜனதா தரிசனம் நிகழ்ச்சிக்கு வந்து வேலைவாய்ப்பு கேட்டு கொடுக்கப்பட்ட மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு உள்ளன. பீதர், கலபுரகி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பலர் வந்துள்ளனர். அவர்கள் தங்களுக்கு வேலை கிடைக்கும் என்று நினைத்து வந்திருக்கிறார்கள். அவர்கள் நினைத்தது போல் வேலை கிடைக்கும்.

வேதனை அளித்தது

கடந்த சில நாட்களுக்கு முன்பு மண்டியா மாவட்டத்தை சேர்ந்த விவசாயி கடன் தொல்லையால் தனது குடும்பத்துடன் தற்கொலை செய்தார். அந்த விவசாயி ஜனதா தரிசனம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனக்கு ஏராளமான கடன் இருப்பதாக கூறி மனு கொடுத்திருந்தார். அவரிடம் கொஞ்சம் பொறுமையாக இருங்கள் என்று கூறி இருந்தேன். அந்த விவசாயிக்கு கடன் கொடுத்தவர்கள் தொல்லை கொடுக்காமல் பார்த்து கொள்ளும்படி மண்டியா மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருந்தேன். அதற்குள் விவசாயி தனது குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்டார். இது மிகுந்த வேதனையை அளித்தது.

நேற்று (அதாவது நேற்று முன்தினம்) வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட ஒரு வாலிபர் விதானசவுதாவில் என்னை சந்தித்து மனு கொடுத்தார். அந்த வாலிபர் வலிப்பு நோய்க்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதால் கடன் வாங்கியதாகவும், கடனை அடைக்க சிரமப்படுவதாகவும் கூறினார். இவ்வாறு ஒவ்வொருவரும் தினம், தினம் கடன் தொல்லையால் அவதிப்படுவதாக கூறி என்னை சந்தித்தால் நான் என்ன செய்வது? என்று தெரியவில்லை.

அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை

மாநிலத்தில் குறைந்த விலையில் பெட்ரோல், டீசல் கிடைக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. விவசாய கடன் தள்ளுபடி செய்திருப்பதால் அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இத்தகைய சூழ்நிலையிலும் பெட்ரோல், டீசல் மீதான வரியை அரசு குறைத்திருக்கிறது. அப்படி இருந்தும் அரசுக்கு மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனாலும் சில கட்சிகளின் தேசிய தலைவர்கள் மட்டும் பிரபலப்படுத்தப்படுகிறார்கள். அது எதற்காக என்பது புரியவில்லை. ஜனதா தரிசனம் நிகழ்ச்சியில் 3,198 பேர் பல்வேறு விதமான மனுக்களை கொடுத்துள்ளனர். இந்த வேலை வாய்ப்பு முகாமில் 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.

மாநிலத்தில் விவசாய கடன் தள்ளுபடி செய்திருந்தாலும், இல்லை என்று பா.ஜனதாவினர் குற்றச்சாட்டு கூறி வருகின்றனர். தேசிய வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய முடியாது என்று மத்திய அரசு கூறியது. கர்நாடக விவசாயிகள் தேசிய வங்கிகளில் வாங்கிய கடன்களும் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டு இருப்பது குறித்து வங்கிகளின் அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளேன். கடனை திரும்ப செலுத்தும்படி விவசாயிகளை வற்புறுத்த கூடாது என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். அதையும் மீறி கடனை செலுத்துமாறு விவசாயிகளுக்கு நெருக்கடி கொடுத்தால் சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு குமாரசாமி பேசினார்.

இந்த வேலை வாய்ப்பு முகாம் தொடக்க விழாவில் மந்திரி ஆர்.வி.தேஷ்பாண்டே, முன்னாள் முதல்-மந்திரி வீரப்ப மொய்லி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்