ஆன்லைன் வணிகத்தை எதிர்த்து 800 மருந்து கடைகள் அடைப்பு

ஆன்லைனில் மருந்து வணிகத்தை எதிர்த்து திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் 800 மருந்து கடைகள் அடைக்கப்பட்டன.

Update: 2018-09-28 23:23 GMT
திண்டுக்கல், 

ஆன்லைன் மூலம் சில நிறுவனங்கள் பல்வேறு பொருட் களை விற்பனை செய்து வருகின்றன. இதன் தொடர்ச்சியாக அனைத்து விதமான மருந்துகளையும் ஆன்லைனில் வணிகம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட உள்ளது. இதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்கு மருந்து வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மேலும் ஆன்லைனில் மருந்து வணிகத்துக்கு அனுமதி வழங்கக் கூடாது என்று வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக நேற்று நாடு முழுவதும் மருந்து வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் நடத்தினர். அதன்படி தமிழ்நாடு முழுவதும் சுமார் 38 ஆயிரம் மருந்து கடைகள்அடைக்கப்பட்டன.

இதில் திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை மொத்தம் 800 மருந்து கடைகள் அடைக்கப்பட்டன. இதில் வியாபாரிகள், ஊழியர்கள் என சுமார் 3 ஆயிரம் பேர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். மாவட்டம் முழுவதும் மருந்து கடைகள் அடைக்கப்பட்டதால், தேவையான நேரத்தில் மருந்துகள் கிடைக்காமல் மக்கள் சிரமப்பட்டனர்.

இதுகுறித்து மருந்து வியாபாரிகள் சங்க மாவட்ட தலைவர் லியோபிரதீப் கூறுகையில், மனிதனின் உயிரை காக்கும் மருந்துகளை ஆன்லைனில் விற்றால், நன்மைகளை விட தீமைகளே அதிகரிக்கும். டாக்டரின் மருத்துவ குறிப்பை பதிவேற்றினால் மருந்துகளை வாங்கலாம் என்று அரசு கூறுகிறது. இதன் மூலம் மலிவு விலை என்று போலி மருந்துகளை விற்பனை செய்யும் அபாயம் உள்ளது. மனித உயிருக்கே உலை வைப்பதாக தான் இருக்கும். எனவே, ஆன்லைனில் மருந்து விற்பனை செய்யக்கூடாது, என்றார். 

மேலும் செய்திகள்