வரதட்சணை கொடுமையால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை: பெயிண்டருக்கு 7 ஆண்டு சிறை

வரதட்சணை கொடுமையால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவத்தில் பெயிண்டருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து கரூர் மகிளா கோர்ட்டு தீர்ப்பு வழங்கி இருக்கிறது.;

Update:2018-09-29 04:46 IST
கரூர்,

கரூர் மண்மங்கலம் தாலுகா மின்னாம்பள்ளி காமராஜர் நகரை சேர்ந்தவர் ஜெயக்குமார்(வயது 37). பெயிண்டர். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சரளாவுக்கும்(27) கடந்த 2014-ம் ஆண்டில் திருமணம் நடந்தது. இந்த நிலையில் திருமணமான 1½ மாதங்களிலேயே சரளா திடீரென வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக வாங்கல் போலீசார், இந்திய தண்டனை சட்ட பிரிவு 174-ன் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அடிக்கடி சரளாவிடம் பணம், நகை வரதட்சணையாக கேட்டு ஜெயக்குமார் தொல்லை கொடுத்து வந்ததும், இதனால் ஒரு கட்டத்தில் சமாளிக்க முடியாமல் சரளா தற்கொலை முடிவுக்கு வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து வரதட்சணை கொடுமையால் தற்கொலைக்கு தூண்டியதாக 304(பி) என்கிற பிரிவுக்கு வழக்கு மாற்றம் செய்யப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை கரூர் மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. இதன் விசாரணை முடிவுற்றதால் நேற்று நீதிபதி சசிகலா தீர்ப்பு வழங்கினார். அதில், வரதட்சணை கொடுமையால் மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்ட ஜெயகுமாருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது. இதையடுத்து ஜெயகுமாரை வேனில் அழைத்து சென்று திருச்சி மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர். இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை கோர்ட்டில் சமர்ப்பித்து திறமையாக செயல்பட்ட போலீசாருக்கு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷாமித்தல் (பொறுப்பு) வாழ்த்து கூறி பாராட்டினார்.

மேலும் செய்திகள்