மாவோயிஸ்டு கைது தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு முதல்-மந்திரி பட்னாவிஸ் வரவேற்பு
பீமா-கோரேகாவ் வன்முறையில் தொடர்புடைய மாவோயிஸ்டுகள் கைது தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுக்கு முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
மும்பை,
பீமா-கோரேகாவ் வன்முறையில் தொடர்புடைய மாவோயிஸ்டுகள் கைது தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுக்கு முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
5 மாவோயிஸ்டுகள் கைது
பீமா-கோரேகாவ் வன்முறையில் தொடர்புடையவர்களாக கருதப்படும் வரவரராவ் உள்பட 5 மாவோயிஸ்டுகளை கடந்த ஆகஸ்டு மாதம் புனே போலீசார் கைது செய்தனர். விசாரணையில், இவர்கள் பிரதமர் நரேந்திர மோடியை கொலை செய்ய திட்டமிட்டு இருந்ததாக தெரிவித்தனர். பின்னர் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுப்படி அவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் எதிர்க்கட்சிகள் போலீசார் உள்நோக்கத்துடன், எந்த வித ஆதாரமும் இன்றி அவர்களை கைது செய்ததாக குற்றம் சாட்டினர்.
ஆனால் போலீசார் இந்த குற்றச்சாட்டை மறுத்தனர். மேலும் ஆதாரங்களையும் பத்திரிகையாளர் சந்திப்பில் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கினர்.
வீட்டுக்காவல் நீட்டிப்பு
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட 5 பேரையும் உடனடியாக விடுவிக்கவேண்டும் என்று கூறி, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. மேலும் கைது குறித்து விசாரணை நடத்த சிறப்பு விசாரணை குழு அமைக்கவேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, அவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது. மேலும் 5 பேரை கைது செய்ததில் போலீசாருக்கு எந்த உள்நோக்கமும் இல்லை என்று கூறியதுடன், அவர்களுக்கு தடைசெய்யப்பட்ட மாவோயிஸ்டு அமைப்புகளுடன் தொடர்புள்ளதை ஆதாரங்கள் நிரூபித்துள்ளதாக தெரிவித்தது.
மேலும் அவர்களின் வீட்டுக்காவலை 4 வாரங்கள் நீட்டித்து உத்தரவிட்டது.
சதி தோற்கடிப்பு
இந்த உத்தரவை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் வரவேற்றுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “இது தடயங்கள் மற்றும் ஆதாரங்களை திறம்பட சேமித்த புனே போலீசாருக்கு கிடைத்த வெற்றியாகும்.
சுப்ரீம் கோர்ட்டு போலீசார் தாக்கல் செய்த ஆதாரத்தில் எந்த சந்தேகமும் இல்லை என்று கூறியிருப்பது, மாநில அரசு மற்றும் புனே போலீசாரின் உண்மை தன்மையை நிரூபித்துள்ளது.
நாட்டிற்கு எதிரான சதி, போலீசாரால் தோற்கடிக்கப்பட்டுள்ளது” என்றார்.
இதேேபால் புனே போலீசாரும் கோர்ட்டின் உத்தரவுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.