கூடுவாஞ்சேரியில் ரூ.20 கோடி ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு வருவாய்துறை அதிகாரிகள் நடவடிக்கை
கூடுவாஞ்சேரியில் ரூ.20 கோடி ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டது.
வண்டலூர்,
காஞ்சீபுரம் மாவட்டம் வல்லாஞ்சேரி, பொத்தேரி, நின்னைக்கரை போன்ற பகுதிகளில் உள்ள ஏரிகளில் நீர் நிரம்பிய பிறகு உபரி நீர் அங்கிருந்து மீனாட்சி நகர் பகுதியில் உள்ள நீர்வரத்து கல்வாய் வழியாக கூடுவாஞ்சேரி ஏரிக்கு செல்கிறது. இந்த நிலையில் மீனாட்சி நகர் பகுதியில் உள்ள நீர்வரத்து கால்வாய்களை அங்கு உள்ள தனியார் பள்ளி ஒன்று ஆக்கிரமித்து சுற்றுச்சுவர்களை கட்டியுள்ளது. இதே போல கால்வாய்களை ஆக்கிரமித்து 7 பேர் வீடுகளை கட்டியுள்ளனர்.
இந்த கால்வாய் ஆக்கிரமிப்பு காரணமாக மழைநீர் மீனாட்சி நகர் பகுதியில் புகுந்துவிடுகிறது. எனவே கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டரிடம் மனுக்களை அளித்தனர்.
சுற்றுச்சுவரின் ஒரு பகுதி இடிப்பு
இதனையடுத்து செங்கல்பட்டு ஆர்.டி.ஒ. முத்துவடிவேல், செங்கல்பட்டு பொதுப்பணித்துறை முதன்மை என்ஜினீயர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் உத்தரவின்பேரில் செங்கல்பட்டு தாசில்தார் பாக்கியலட்சுமி, செங்கல்பட்டு பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் பிரசன்னபிரபு மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் நேற்று கூடுவாஞ்சேரி மீனாட்சி நகர் பகுதிக்கு சென்றனர்.
பின்னர் நீர்வரத்து கால்வாய்களை ஆக்கிரமிப்பு செய்து தனியார் பள்ளி நிர்வாகத்தினர் கட்டி இருந்த சுற்றுச்சுவரின் ஒரு பகுதியை இடித்து ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டனர். மீதம் உள்ள சுற்றுசுவர்களை அகற்ற கால அவகாசம் அளித்தனர்.
ரூ.20 கோடி
அதே போல கால்வாய்களை ஆக்கிரமித்து கட்டியுள்ள 7 வீடுகளுக்கு மாற்று வீடு வழங்கிய பிறகு அங்குள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்றும், தற்போது மீட்கப்பட்ட இடத்தின் மதிப்பு ரூ.20 கோடி என்று வருவாய்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பள்ளி நிர்வாகத்தினர் நிருபர்களிடம் கூறும் போது:-
எந்தவிதமான முன் அறிவிப்புகள் இன்றி திடீரென வந்து பள்ளியின் சுற்றுசுவர்களை இடிக்கின்றனர். பள்ளி ஆக்கிரமிப்பு செய்து இருந்தால் இடிப்பதற்கு முன் பொதுபணித்துறை மற்றும் வருவாய்த்துறை சார்பில் நோட்டீஸ் வழங்கவேண்டும், இது வரை எந்தவிதமான நோட்டீஸ்களும் வழங்கப்படவில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.