கர்நாடகத்தில் கூடுதலாக தொடக்கப்பள்ளிகளை திறக்க அரசு பரிசீலனை மந்திரி என்.மகேஷ் தகவல்
கர்நாடகத்தில் கூடுதலாக தொடக்கப்பள்ளிகளை திறக்க மாநில அரசு பரிசீலனை செய்து வருவதாக மந்திரி என்.மகேஷ் தெரிவித்தார்.
கோலார் தங்கவயல்,
கர்நாடகத்தில் கூடுதலாக தொடக்கப்பள்ளிகளை திறக்க மாநில அரசு பரிசீலனை செய்து வருவதாக மந்திரி என்.மகேஷ் தெரிவித்தார்.
கூடுதலாக தொடக்கப்பள்ளிகள்..
கோலார் தாலுகா கெம்போடி கிராமத்தில் தனியார் தொழிற்சாலையின் பங்களிப்பில் அரசு பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதனை நேற்று கர்நாடக பள்ளி கல்வித்துறை மந்திரி என்.மகேஷ் திறந்து வைத்தார். பின்னர் நடந்த விழாவை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து அவர் பேசியதாவது:-
கர்நாடகத்தில் கூடுதலாக தொடக்கப்பள்ளிகளை திறக்க மாநில அரசு பரிசீலனை செய்து வருகிறது. இதுதொடர்பாக உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. முதல்-மந்திரி குமாராசாமியிடம் இதுதொடர்பாக பேசி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். கர்நாடகத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது. அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தவறான எண்ணம்
அரசு பள்ளிகளில் படித்தால் ஆங்கில திறமை இருக்காது என்று பெற்றோர் கருதுகிறார்கள். இது தவறான எண்ணம். இதனால் கர்நாடகத்தில் 1-ம் வகுப்பு முதல் மாணவ-மாணவிகளுக்கு ஆங்கிலம் கற்றுக்கொடுக்க அரசு முடிவு செய்துள்ளது. இதன்மூலம், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்ப்பார்கள்.
இவ்வாறு அவர் பேசினார். இந்த விழாவில் கோலார் மாவட்ட கலெக்டர் மகேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.