நாமக்கல் அருகே பள்ளத்தில் கார் பாய்ந்து பெண் பலி, 3 பேர் படுகாயம்

நாமக்கல் அருகே, கார் பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்கு உள்ளானதில் பெண் சம்பவ இடத்திலேயே இறந்தார். தனியார் பள்ளி உரிமையாளர் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2018-09-28 22:30 GMT
நாமக்கல்,

திருவள்ளூர் பழைய சென்னை சாலையில் தனியார் பள்ளி வைத்து நடத்தி வருபவர் பிரான்சிஸ் பத்மநாபன் (வயது 55). இவர் தனது குடும்பத்தினருடன் காரில் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று விட்டு நேற்று ஊருக்கு திரும்பினார்.

வழியில் சேலம் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலை வழியாக அவர்களது கார் வந்தது. நாமக்கல் அருகே உள்ள முதலைப்பட்டி பகுதியில் வந்தபோது கார் கட்டுப்பாட்டை இழந்து, நெடுஞ்சாலையின் எதிர் திசை சாலையை கடந்து சென்று அங்கிருந்த சாலையோர பள்ளத்தில் பாய்ந்து விபத்திற்கு உள்ளானது.

இதில் காரில் பயணம் செய்த பிரான்சிஸ் பத்மநாபனின் மாமியார் ஜமீனா பேகம் (62) படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் பிரான்சிஸ் பத்மநாபன், அவரது மனைவி யாஸ்மின் தாஜ் (45), கார் டிரைவர் ராம் (39) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற நல்லிபாளையம் போலீசார், பொதுமக்கள் உதவியோடு காயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல்லில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் உயிரிழந்த ஜமீனா பேகத்தின் உடலை மீட்டு நாமக்கல் மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளத்தில் கிடந்த காரை போலீசார் மேலே கொண்டு வந்தனர்.

இந்த விபத்து குறித்து நல்லிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கைலாசம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், மொபட்டில் சாலையை கடக்க முயன்றவர் மீது மோதாமல் இருக்க டிரைவர் காரை திருப்பியபோது விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.

மேலும் சம்பவ இடத்தில் சேதமடைந்த நிலையில் மொபட் ஒன்று கிடந்தது. அது யாருடையது? அதை ஓட்டி வந்தவர் யார்? என்பது பற்றியும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்