கிருஷ்ணகிரி மாவட்டம், உணவு சாப்பிட வராததால் மனைவி குத்திக்கொலை தொழிலாளி கைது

பெண் மர்மசாவில் திடீர் திருப்பமாக உணவு சாப்பிட வராததால் ஆத்திரமடைந்த தொழிலாளி, மனைவியை குத்திக்கொலை செய்தது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-09-28 23:00 GMT
தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அருகே உள்ள சின்ன மதகொண்டப்பள்ளியை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 45). தொழிலாளி. இவருடைய மனைவி லட்சுமி (40). இவர்களுக்கு பிரதாப் என்ற மகனும், சுதாராணி என்ற மகளும் உள்ளனர். சுதாராணி திருமணமாகி, கர்நாடக மாநிலத்தில் கணவருடன் வசித்து வருகிறார்.

கடந்த 24-ந் தேதி தலையில் அடிபட்டு மர்மமான முறையில் வீட்டில் லட்சுமி இறந்து கிடந்தார். இது குறித்து, அவரது மகன் பிரதாப் கொடுத்த புகாரின் பேரில் தளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இந்த நிலையில் திடீர் திருப்பமாக மருத்துவ பரிசோதனை அறிக்கையில், லட்சுமி கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து லட்சுமியின் கணவர் நாகராஜை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

அதில், கடந்த, 23-ந் தேதி இரவு, மனைவி லட்சுமியை சமையல் செய்யுமாறு நாகராஜ் கூறினார். ஆனால் லட்சுமி சமையல் செய்ய மறுத்துள்ளார். இதனால், நாகராஜ் சமையல் செய்தார். பின்னர் சமையல் செய்து விட்டு, மனைவியை சாப்பிட வருமாறு அழைத்தார். அந்த நேரம் லட்சுமி உணவு சாப்பிட வராததால் மேலும் ஆத்திரமடைந்த நாகராஜ், கத்தியால் லட்சுமியை குத்தியதுடன், கட்டிலில் இருந்து கீழே தள்ளி விட்டார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு லட்சுமி இறந்தது தெரிய வந்தது. இதையடுத்து நாகராஜை நேற்று போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்