பெண் சப்–இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேரை தாக்கிய வழக்கில் 2 வாலிபர்களுக்கு 7 ஆண்டு சிறை

பெண் சப்–இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேரை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட 2 வாலிபர்களுக்கு தலா 7 ஆண்டு சிறைதண்டனை விதித்து திருப்பூர் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.

Update: 2018-09-28 23:15 GMT

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூர் போலீஸ் நிலையத்தில் சப்–இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் கோமதி. இவர் தற்போது குன்னத்தூர் போலீஸ் நிலையத்தில் சப்–இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 2015–ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28–ந்தேதி பெருமாநல்லூர் அருகே உள்ள சோதனை சாவடியில் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். இவருடன் பெண் போலீஸ்கள் தீபா, சுதா மற்றும் போலீஸ் நண்பர்கள் குழுவை சேர்ந்த தினேஷ்கிருஷ்ணன் ஆகியோரும் பணியில் இருந்தனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் 2 வாலிபர்கள் வந்தனர்.

அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் அவர்களிடம் சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த வாலிபர்கள் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை சோதனை சாவடி அறைக்கு அழைத்து சென்று தகவல்களை கேட்டுள்ளனர். இதனால் கோபம் அடைந்த அந்த போதை வாலிபர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், சோதனை சாவடியில் இருந்த நாற்காலிகள், மின்விளக்குகள் உள்ளிட்ட பொருட்களையும் அடித்து நொறுக்கியுள்ளனர். மேலும், சப்–இன்ஸ்பெக்டர் கோமதி மற்றும் பெண் போலீசார் தீபா, சுதா ஆகியோர் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதில் அவர்கள் காயம் அடைந்தனர். இது குறித்த புகாரின் பேரில் பெருமாநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர்கள் மதுரை மாவட்டம் பெரியபட்டி பகுதியை சேர்ந்த ராம்குமார்(வயது 26) மற்றும் குமார்(28) என்பது தெரியவந்தது. இவர்கள் இருவர் மீதும் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்த வழக்கு திருப்பூர் 2–வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் வழக்கு நீதிபதி முகமது ஜியாபுதீன் முன்னிலையில் நேற்று விசாரணைக்காக வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி குற்றம் சாட்டப்பட்ட 2 வாலிபர்களுக்கும் தலா 7 ஆண்டுகள் சிறைதண்டனையும், ராம்குமாருக்கு ரூ.2,500 அபராதமும், குமாருக்கு ரூ.1,500 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

இந்த தண்டனை வழங்கப்பட்டது குறித்து நீதிபதி முகமது ஜியாபுதீன் தீர்ப்பில் மேலும் கூறியிருப்பதாவது:–

பெண்களுக்கு எதிரான குற்ற செயல்கள் அதிகரித்து வருகிறது. இந்த வழக்கில் பெண் போலீசாரை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், அவர்கள் மீது குற்றவாளிகள் தாக்குதலும் நடத்தியுள்ளனர். பெண்கள் ஆண்களுக்கு கீழ் உள்ளவர்கள் என்ற எண்ணத்துடன் அவர்கள் நடந்து கொண்டுள்ளனர். இது மாற்றப்படவேண்டும். ஒரு ஆணை போல பெண்ணும் சமமான ஒரு பிறவி என்று சொல்ல கூட உரிமை இல்லாத நிலையே உள்ளது.

இந்த வழக்குடன் நிர்பயா வழக்கு தொடர்பு இல்லை என்றாலும், வழக்கின் சூழலை கருத்தில் கொண்டு இதனுடன் ஒப்பிடுவது பொருத்தமானதாக இருக்கும். பெண்கள் பொறுப்பு வகிப்பதும், அதிகாரத்துக்கு வருவதும் சில ஆண்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது. இதனால் பெண்களுக்கு எதிரான வன்கொடுமையை தடுக்கும் நோக்கிலேயே இந்த 2 பேருக்கும் 7 ஆண்டு சிறை விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் முருகேசன் வாதாடினார்.

மேலும் செய்திகள்