வாடகை காரில் இலவசமாக சுற்றுலா சென்று மோசடியில் ஈடுபட்டவர் கைது
தனியார் கட்டுமான நிறுவன வாடிக்கையாளர் போல் நடித்து வாடகை காரில் இலவசமாக சுற்றுலா சென்று ரூ.94 ஆயிரம் வரை மோசடியில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர்.
பூந்தமல்லி,
தனியார் கட்டுமான நிறுவனங்கள் சார்பில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகளை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு அந்த வீடுகளை அவர்கள் நேரில் சென்று பார்ப்பதற்காக கட்டுமான நிறுவனம் சார்பில் வாடகை கார் வசதி செய்து கொடுக்கப்படுகிறது. இதற்காக தங்கள் வாடிக்கையாளர்களுக்கு ரகசிய குறியீட்டு எண்ணை கொடுப்பார்கள்.
வாடிக்கையாளர்கள், கால் டாக்சி நிறுவனத்துக்கு போன் செய்து அந்த ரகசிய குறியீட்டு எண்ணை கூறினால் அவர்களை காரில் ஏற்றிக்கொண்டு அடுக்குமாடி குடியிருப்புக்கு அழைத்துச்சென்று விடுவார்கள். அதற்கான தொகையை அந்த கட்டுமான நிறுவனத்திடம் இருந்து கால் டாக்சி நிறுவனம் வாங்கிக்கொள்ளும்.
வாடகை காரில் சுற்றுலா
சென்னை ராயபுரத்தை சேர்ந்தவர் ஸ்ரீதர்(வயது 28). இவர், தனியார் கட்டுமான நிறுவனத்தின் கட்டிடங்களை பார்க்க சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் ரகசிய குறியீட்டு எண்ணை தெரிந்துகொண்டு, அதன்மூலம் வாடிக்கையாளர் போல் நடித்து கால் டாக்சி நிறுவனத்துக்கு போன் செய்து தனியார் கட்டுமான நிறுவனத்தை பார்க்க செல்வதாக கூறி வாடகை காரில் இலவசமாக பல இடங்களுக்கு சென்று வந்தார்.
இதேபோல் தனியார் கட்டுமான நிறுவன வீட்டை பார்க்க செல்வதாக கூறி கொடைக்கானலுக்கும் வாடகை காரில் இலவசமாக சுற்றுலா சென்று வந்தார். இதில் சந்தேகம் அடைந்த கால்டாக்சி நிறுவன மேலாளர், கட்டுமான நிறுவனத்திடம் தொடர்பு கொண்டு கேட்டபோது கொடைக்கானலில் எந்த கட்டுமான பணியும் நடக்கவில்லை. வாடிக்கையாளர்கள் அங்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்தனர்.
கைது
இதற்கிடையில் ஸ்ரீதர், மீண்டும் தனியார் கட்டுமான நிறுவன வாடிக்கையாளர்போல் கால் டாக்சி நிறுவனத்துக்கு போன் செய்து வாடகைக்கு காரை கேட்டார். உஷாரான கால் டாக்சி நிறுவனம் அவரிடம், இதுவரை தனியார் கட்டுமான நிறுவன வாடிக்கையாளர் போல் நடித்து காரை வாடகைக்கு எடுத்து சென்றதற்கான பணத்தை தரும்படி கேட்டனர். ஆனால் அவர் பணம் கொடுக்க மறுத்து விட்டார்.
இதையடுத்து தனியார் கால் டாக்சி நிறுவனத்தின் மேலாளரான சென்னை கோடம்பாக்கம் ஆற்காடு சாலையை சேர்ந்த கோபிகிருஷ்ணன், இதுபற்றி வடபழனி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, ஸ்ரீதரை கைது செய்து விசாரித்தனர்.
அதில் அவர், தனியார் கட்டுமான நிறுவன வாடிக்கையாளர் போல் நடித்து கால் டாக்சி நிறுவனத்தில் வாடகைக்கு காரை எடுத்துச்சென்று ரூ.94 ஆயிரம் வரை மோசடி செய்து இருப்பது தெரிந்தது. இதையடுத்து ஸ்ரீதர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை சிறையில் அடைத்தனர்.