கோவிலின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் அம்மன் சிலை திருட்டு

நன்னிலம் அருகே விசலூர் மகாகாளியம்மன் கோவிலின் பூட்டை உடைத்து ரூ.1½ லட்சம் மதிப்புள்ள அம்மன் சிலையை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.

Update: 2018-09-28 22:00 GMT
நன்னிலம், 

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள விசலூர் ஆதிதிராவிடர் தெருவில் மகா காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மூலவர் சிலை கருங்கல்லால் வடிவமைக்கப்பட்டது. மேலும் 1¾ அடி உயரத்தில் 45 கிலோ எடையில் உற்சவர் அம்மன் உலோக சிலையும் இருந்தது.

கடந்த 25-ந் தேதி பூஜை முடிந்த பின்னர் கோவில் பூசாரி கோவிலை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று காலை அந்த வழியாக வந்த ஒருவர் கோவிலின் சுற்றுச்சுவர் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து ஊர்மக்களிடம் கூறினார். உடனே ஊர்மக்கள் கோவிலுக்கு சென்று பார்த்தனர். அப்போது கோவிலில் இருந்த உலோக அம்மன் சிலை திருட்டு போய் இருந்தது தெரிய வந்தது. உடனடியாக இது குறித்து கிராம மக்கள் நன்னிலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் நன்னிலம் துணை போலீஸ் சூப்பிரண்டு அருண், இன்ஸ்பெக்டர் சந்திரா, சப்-இன்ஸ்பெக்டர் சுகன்யா மற்றும் போலீசார் கோவிலுக்கு விரைந்து சென்று பார்வையிட்டு இந்த திருட்டு தொடர்பாக விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் கோவிலுக்கு வந்து ரேகைகளை பதிவு செய்தனர்.

சம்பவ இடத்துக்கு மோப்பநாய் ‘ராக்சி’ வரவழைக்கப்பட்டது. அது கோவிலில் இருந்து 1 கிலோ மீட்டர் தூரம் ஓடி சென்று கருவேலங்காட்டில் நின்று விட்டது.

இதனால் சிலையை திருடி சென்ற மர்ம நபர்கள் சிலையை கருவேலங்காட்டுக்குள் பதுக்கி வைத்துள்ளனரா? அல்லது அருகே உள்ள வாய்க்கால் நீரில் போட்டு சென்றார்களா? என சந்தேகமடைந்த போலீசார் கருவேலங்காட்டு பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதேபோல வாய்க்காலிலும் தேடும் பணி நடைபெற்றது. ஆனால் சிலை கிடைக்கவில்லை.

திருட்டு போன சிலையின் மதிப்பு ரூ.1½ லட்சம் என கூறப்படுகிறது. சிலையை திருடி சென்றவர்களை பிடிக்க துணை போலீஸ் சூப்பிரண்டு அருண் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படை போலீசார் சிலையை திருடிச்சென்ற மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோவில் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் சிலையை திருடி சென்ற சம்பவம் நன்னிலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்