ஓடும் ரெயிலில் இளம் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு போலீசார் விசாரணை
ஓடும் ரெயிலில் இளம் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை,
ஐதராபாத்தை சேர்ந்தவர் தீபிகா மாலிக்(வயது 24). இவர் சென்னை கோபாலபுரத்தில் தங்கி அருகில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம்பெங்களூருவில் இருந்து சென்னைக்கு தனது 2 சக ஊழியர்களுடன் தீபிகா மாலிக் ரெயில் மூலம் புறப்பட்டார்.
ரெயில் பயணம் தொடங்கிய சிறிது நேரத்தில் பெட்டியில் இருந்த அனைவரும் தூங்கச் சென்றுள்ளனர். அப்போது தீபிகா மாலிக் பயணித்த அதே பெட்டியில் இருந்த 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் அவருக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் தீபிகா மாலிக்கும், அவருடன் வந்த 2 சக ஊழியர்களும் அந்த வாலிபரை திட்டியுள்ளனர். இதையடுத்து அவர் ரெயிலை விட்டு அடுத்த ரெயில் நிலையத்தில் இறங்கி சென்றார்.
இந்த நிலையில் ரெயில் சென்னையை அடைந்தவுடன், தீபிகா மாலிக் சென்டிரல் ரெயில்வே போலீசாரிடம் இது குறித்து புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த ரெயில்வே போலீசார், ஓடும் ரெயிலில் அவருக்கு பாலியல் தொந்தரவு செய்த வாலிபரை தேடி வருகின்றனர்.