சேலம் அருகே அம்பேத்கர் சிலை உடைப்பு சாலை மறியல்- 2 பேர் தீக்குளிக்க முயற்சி

சேலம் அருகே அம்பேத்கர் சிலையை மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தினர். இதைக் கண்டித்து மறியல் போராட்டம் நடந்தது. அப்போது 2 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-09-28 23:15 GMT
கருப்பூர்,

சேலம் மாவட்டம் கருப்பூர் அருகே வெள்ளாளப்பட்டி பஸ்நிறுத்தம் அருகில் அம்பேத்கர் சிலை உள்ளது. நேற்று முன்தினம் இரவு இந்த சிலையை மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தினர். சிலையின் கைகள் உடைக்கப்பட்டு கீழே கிடந்தன. நேற்று காலை இதைப் பார்த்த அந்த கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். சிலை உடைப்பு பற்றிய தகவல் பரவியதும் அந்த பகுதியில் ஏராளமானோர் திரண்டனர்.

மேலும் விடுதலை சிறுத்தைகள், அம்பேத்கர் மக்கள் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, ஆதி தமிழர் பேரவை மற்றும் பல்வேறு அமைப்பினர் அங்கு வந்தனர். சிலையை உடைத்தவர்களை கைது செய்ய வேண்டும், தமிழகம் முழுவதும் உள்ள சிலைகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும், என்று அவர்கள் கோஷம் எழுப்பினார்கள். இதனால் அங்கு பதற்றமும், பரபரப்பும் நிலவியது. இதைத்தொடர்ந்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து அங்கு திரண்டு இருந்தவர்கள் சேலம் - ஓமலூர் தேசிய நெடுஞ்சாலையான கரும்பாலைக்கு வந்து சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் மேட்டூர் உதவி கலெக்டர் ரவிச்சந்திரன், ஓமலூர் தாசில்தார் சித்ரா, போலீஸ் துணை கமிஷனர் தங்கதுரை, உதவி கமிஷனர்கள் மோகன், செல்வராஜ் மற்றும் போலீசார் அங்கு வந்து சாலைமறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது மறியலில் ஈடுபட்டவர்கள், சிலையை சேதப்படுத்தியவர்களை கைது செய்ய வேண்டும், மாற்று சிலையை கொண்டு வந்து வைக்க வேண்டும், அதுவரை போராட்டம் தொடரும், என்றனர். அதற்கு அதிகாரிகள், உயர் அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும், என்றனர். இதையடுத்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

இதற்கிடையில், பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தபோதே விடுதலை சிறுத்தைகள் கட்சி ஓமலூர் ஒன்றிய துணை செயலாளர் நந்தா ஹாசன் (வயது 25), அழகு (23) ஆகிய 2 பேர் சிலை அருகில் வந்தனர். அம்பேத்கர் சிலையை உடைத்தவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும், என்று கோரிக்கை விடுத்து உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசாரும், போராட்டக்காரர்களும் விரைந்து சென்று 2 பேரிடம் இருந்து பெட்ரோல் கேன்களை பறித்தனர். பின்னர் அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி தீக்குளிக்கும் முயற்சியை தடுத்து நிறுத்தினர். இதற்கிடையே அம்பேத்கர் சிலை உடைப்பை கண்டித்து வெள்ளாளப்பட்டியில் கடைகள் அடைக்கப்பட்டன. மேலும் பஸ் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது.

போராட்டத்தை தொடர்ந்து நேற்று மாலை வெள்ளாளப்பட்டிக்கு புதிதாக அம்பேத்கர் சிலை கொண்டு வரப்பட்டது. இதையடுத்து உடைந்த சிலை அகற்றப்பட்டு அந்த இடத்தில் புதிய சிலை நிறுவப்பட்டது. இதைப்பார்த்ததும் அங்கு திரண்டு இருந்தவர்கள் வாழ்த்து கோஷம் எழுப்பினார்கள். சிலைக்கு மாலை அணிவித்து அவர்கள் மரியாதை செலுத்தினார்கள்.

அம்பேத்கர் சிலை உடைப்பு சம்பவம் குறித்து கருப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொ) ரஜினி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிலையை உடைத்த மர்ம நபர்களை தேடி வருகிறார்கள். இதுதொடர்பாக 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்