தூத்துக்குடியில் வியாபாரிகள் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடியில் வியாபாரிகள் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் வியாபாரிகள் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி மண்டல தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் தூத்துக்குடி சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே கருப்பு சட்டை அணிந்து வியாபாரிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். மண்டல தலைவர் எம்.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர்கள் வெற்றிராஜன், ராஜா, இணை செயலாளர்கள் பொன்ராஜ், வெங்கடேசுவரன், ஜெபஸ் திலகராஜ், தசரதபாண்டியன், தெற்கு மாவட்ட தலைவர் காமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வடக்கு மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம் வரவேற்று பேசினார்.
கோரிக்கை
சில்லறை வணிகத்தை அழிக்கும் வால்மார்ட், பிளிப்கார்ட் ஆகிய அன்னிய நாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கிய மத்திய அரசை கண்டிப்பது, பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து பொருட்களுக்கும் ஜி.எஸ்.டி. 5 சதவீதம் முதல் 12 சதவீதம் மட்டும் அமல்படுத்த வேண்டும். ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும். சில்லறை வணிகத்தில் நேரடி அன்னிய முதலீட்டை தடை செய்ய வேண்டும். பிளாஸ்டிக் உபயோகத்துக்கு மாற்று பொருள் கண்டுபிடிக்கும் வரை பிளாஸ்டிக் தடை செய்யக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.
ஆர்ப்பாட்டத்தில் தெற்கு மாவட்ட செயலாளர் செல்வன், பொருளாளர் அருணாசலம், மாவட்ட மகளிர் அணி தலைவர் ராஜம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் பாஸ்கரன் நன்றி கூறினார்.