சத்துணவு மையங்களில் 1,101 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் கலெக்டர் ரோகிணி தகவல்

சேலம் மாவட்டத்தில் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 1,101 பணியிடங்களுக்கு தகுதியுடைய பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2018-09-28 22:00 GMT
சேலம்,

மாவட்ட கலெக்டர் ரோகிணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சத்துணவு திட்டத்தின் கீழ் செயல்படும் பள்ளி சத்துணவு மையங்களில் உள்ள காலிப்பணியிடங்களை இனசுழற்சி முறையில் நிரப்ப அரசால் உத்தரவிடப்பட்டுள்ளது. 316 சத்துணவு அமைப்பாளர் பணிகள், 785 சமையல் உதவியாளர் பணிகள் என மொத்தம் 1,101 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளது. இந்த பணிகளுக்கு தகுதிபெற்ற பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். ஆண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது.

சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியங்கள், நகராட்சி மற்றும் மாநகராட்சி அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு அதற்கான விண்ணப்பங்கள் வருகிற 1-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை அலுவலக வேலை நேரங்களில் வழங்கப்படும்.

ஒரு விண்ணப்பதாரர் ஒரு காலிப்பணியிடத்திற்கு மட்டுமே விண்ணப்பிக்கலாம். இரண்டு பணிகளுக்கும் விண்ணப்பம் செய்வோர் நியமன பணியிடத்திற்கும், விண்ணப்பதாரர் குடியிருப்புக்கும் இடையே தூரம் 3 கிலோ மீட்டருக்குள் இருக்க வேண்டும். அமைப்பாளர் பணிக்கு ரூ.7,700 முதல் ரூ.24,200 வரையிலும், சமையல் உதவியாளர் பணிக்கு ரூ.3,000 முதல் ரூ.9 ஆயிரம் வரையிலும் ஊதியம் மற்றும் இதர படிகள் வழங்கப்படும். சத்துணவு அமைப்பாளர் மற்றும் சமையல் உதவியாளர் நிலைகளில் இனசுழற்சி முறையில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்