ஆற்றில் அடித்து செல்லப்பட்ட விவசாயி பிணமாக மீட்பு
தஞ்சை அருகே ஆற்றில் அடித்து செல்லப்பட்ட விவசாயி பிணமாக மீட்கப்பட்டார்.
கள்ளப்பெரம்பூர்,
தஞ்சை அருகே உள்ள ரெட்டிப்பாளையம் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (வயது46). விவசாயி. ராஜமாணிக்கம் தனது மகன் ராஜ்குமாருடன் நேற்றுமுன்தினம் மானோஜிப்பட்டியில் உள்ள வயலில் வேலை பார்த்து விட்டு கல்லணை கால்வாய் ஆற்றங்கரை படித்துறையில் இறங்கி கால் கழுவினார். அப்போது அவர் திடீரென ஆற்றில் தவறி விழுந்து அடித்து செல்லப்பட்டார். இதைக் கண்ட அவரது மகன் ராஜ்குமார் கதறி அழுதபடி அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ஆற்றில் தனது தந்தையை தேடினார். ஆனால் அவரை மீட்க முடியவில்லை. இது குறித்து தஞ்சை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. இதைத்தொடர்ந்து தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று ஆற்றில் இறங்கி ராஜமாணிக்கத்தை தேடினர்.
இந்தநிலையில் நேற்று காலை வெட்டிக்காடு அருகே உள்ள கண்டிதம்பட்டு தடுப்பணை அருகே ஆற்றில் ஒரு ஆண்பிணம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் கண்டிதம்பட்டு தடுப்பணைக்கு சென்று பார்த்தனர். அப்போது ஆற்றில் பிணமாக மிதந்தது ராஜமாணிக்கம் என தெரியவந்தது. அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கள்ளப்பெரம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்த ராஜமாணிக்கத்துக்கு ரூத்மேரி என்ற மனைவியும் ராஜசேகர், ராஜ்குமார் ஆகிய இரு மகன்களும் தாரிகா என்ற மகளும் உள்ளனர்.