ஆன்லைன் வர்த்தகத்தை கண்டித்து கருப்பு சின்னம் அணிந்து வணிகர்கள் ஆர்ப்பாட்டம்

ஆன்லைன் வர்த்தகத்தை கண்டித்து கருப்பு சின்னம் அணிந்து வணிகர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். மருந்து கடைகளும் அடைக்கப்பட்டன.

Update: 2018-09-28 22:00 GMT
தஞ்சாவூர்,


மருந்து வணிகத்தில் ஆன்லைன் வர்த்தகத்தை கொண்டு வரும் மத்தியஅரசை எதிர்த்து தஞ்சை மாவட்டத்தில் மருந்து கடைகள் நேற்று அடைக்கப்பட்டன. மொத்தம் 2 ஆயிரம் மருந்து கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. தனியார் மருத்துவமனைகளில் உள்ள மருந்து கடைகள் வழக்கம்போல் செயல் பட்டன.

பின்னர் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புடன் தஞ்சை மாவட்ட மருந்து வணிகர் சங்கம் இணைந்து தஞ்சை ரெயிலடியில் உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். இதற்கு மண்டல தலைவர் செந்தில்நாதன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர்கள் மகேந்திரன், ராமமூர்த்தி, குணசேகரன், தமிழ்ச்செல்வன், மாநில துணைத் தலைவர்கள் சுப்பு, தென்னரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். தெற்கு மாவட்ட தலைவர் பாண்டியன் வரவேற்றார்.

ஆர்ப்பாட்டத்தில், சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கக்கூடாது. மருந்து வணிகத்தில் ஆன்லைன் வர்த்தகத்தை அனுமதிக்கக்கூடாது. உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டத்தை பயன்படுத்தி வணிகர்களை துன்புறுத்தும் நடவடிக்கையை கைவிட வேண்டும். பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வந்து விலை உயர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். 2019-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் மாநிலம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தனித்தனியாக ஒவ்வொரு மாவட்டத்திலும் சோதனை என்ற பெயரில் மாவட்ட கலெக்டர்கள், வருவாய்த்துறை அதிகாரிகளின் அத்துமீறல்கள் தடுக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதில் தமிழ்நாடு தையல்கலை தொழிலாளர் முன்னேற்ற சங்க மாநில தலைவர் ஆறுமுகம், ஓட்டல் உரிமையாளர் சங்க மாவட்ட தலைவர் சுப்பிரமணியசர்மா, மருந்து வணிகர் சங்க மாவட்ட செயலாளர் விஸ்வம், நெல் அரிசி வணிகர் நல சங்க தலைவர் பிச்சைமொய்தீன், வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில துணைத் தலைவர் சுப்பிரமணியன், ஞானசேகரன், இணைச் செயலாளர் சேகர் மற்றும் பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டனர். இவர்களில் பலர் கருப்பு சட்டை அணிந்திருந்தனர். மற்றவர்கள் கருப்பு சின்னம் அணிந்திருந்தனர். 

மேலும் செய்திகள்