தோட்டக்கலைத்துறை மூலம் ரூ.14 லட்சம் மதிப்பில் வேளாண் உபகரணங்கள், அமைச்சர் பாஸ்கரன் வழங்கினார்
தோட்டக்கலைத்துறையின் மூலம் ரூ.14 லட்சம் மதிப்பில் வேளாண் உபகரணங்களை அமைச்சர் பாஸ்கரன் வழங்கினார்.;
சிவகங்கை,
மாவட்ட தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் மூலம் நவீன தொழில்நுட்பத்தில் காய்கறி பயிர்கள் சாகுபடி செய்வது குறித்த ஒருநாள் பயிற்சி கருத்தரங்கு நிகழ்ச்சி அமைச்சர் பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது. அதில் அமைச்சர் விவசாயிகளுக்கான தொழில்நுட்ப கையேடுவை வெளியிட்டு பேசியதாவது:– விவசாயப் பெருமக்கள் சிந்தித்து திட்டமிட்டு செயல்பட்டால் சரியான பலனைப் பெறலாம்.
தற்போது மழை குறைவாக பெய்துள்ளதால், அதற்கேற்ப தண்ணீர் நிலையை கருத்தில் கொண்டு அதிநவீன தொழில்நுட்ப கருவிகள் வேளாண்மைத்துறையின் மூலம் வழங்கப்படுகிறது. இந்த கருவிகளை கொண்டு வேளாண் அலுவலர்களின் ஆலோசனைப்படி விவசாயப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். முன்பு விவசாயிகள் விளைப்பொருட்களை அப்போதே விற்பனை செய்திட வேண்டும்.
இல்லையென்றால் விவசாயப் பொருட்களின் தரம் குறைவு ஏற்படும். இதனால் விவசாயிகளுக்கு போதிய லாபம் கிடைக்காத நிலை ஏற்பட்டது. அதை உணர்ந்து விவசாயிகளின் நலன் கருதி குளிரூட்டப்பட்ட பாதுகாப்பு கிடங்குகள் அரசு சார்பில் கட்டப்பட்டு வழங்கப்பட்டு உள்ளது. இதை விவசாயிகள் பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து தோட்டக்கலைத்துறையின் மூலம் 15 பேருக்கு ரூ.14 லட்சம் மதிப்பில் வேளாண் உபகரணங்கள் மற்றும் கொய்யா, மா வகை மரக்கன்றுகளை அமைச்சர் வழங்கினார். முன்னதாக தோட்டக்கலை, வேளாண்மை, வேளாண்துறைகள் மற்றும் வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு வழங்கும் திட்டங்கள் குறித்த கண்காட்சியை அமைச்சர் திறந்து வைத்து பார்வையிட்டார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் ராஜேந்திரன், கால்நடைப் பராமரிப்புத்துறை இணை இயக்குனர் நவநீதகிருஷ்ணன், வேளாண் பொறியியல்துறை செயற்பொறியாளர் இளங்கோவன், மத்திய கூட்டுறவு வங்கி நிர்வாக இயக்குனர் பழனீஸ்வரி, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர்கள் ஏழுமலை, சக்திவேல், கலைச்செல்வன், ரேகா மற்றும் அரசு அலுவலர்கள், விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.