மாவட்டம் முழுவதும் காவிரி கூட்டு குடிநீர் வழங்க வேண்டும், விவசாயிகள் கோரிக்கை
மாவட்டம் முழுவதும் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் குடிநீர் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டதில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
சிவகங்கை,
மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கூட்டுறவு இணை பதிவாளர் ஆரோக்கியசுகுமார், வேளாண்மை இணை இயக்குனர் சேகர் மற்றும் அனைத்துதுறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். விவசாயிகள் தரப்பில் சேங்கைமாறன், கன்னியப்பன், அய்யாச்சாமி, சந்திரன், ஜெயராமன், நாகநாதன், வீரபாண்டியன், வக்கீல்கள் ராஜா, கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்
கூட்டத்தில் விவசாயிகள் தரப்பில் சேங்கைமாறன் பேசியதாவது:– காவிரி கூட்டு குடிநீர் திட்டம் கடந்த 2010–ம்ஆண்டு முதல் செயல்படுகிறது. இந்த திட்டத்தில் மாவட்டம் முழுவதிற்கும் தண்ணீர் தரவேண்டும். தற்போது ராமநாதபுரம் மாவட்டத்திற்கு அனைத்து ஊர்களுக்கும் தண்ணீர் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் சிவகங்கை மாவட்டத்தில் இன்னும் 8 பேரூராட்சி பகுதிக்கும் 2 ஆயிரத்து 665 குடியிருப்புகளுக்கும் தண்ணீர் வழங்கப்படவில்லை. எனவே உடனடியாக விடுபட்ட பகுதிகளுக்கு தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுபோல மாவட்டத்தில் உள்ள அனைத்து தேசியமயமாக்கபட்ட வங்கிகளிலும் 4 சதவீத வட்டிக்கு விவசாயத்திற்கு நகைகடன் வழங்குகின்றனர். ஆனால் கூட்டுறவு வங்கிகளில் கூடுதல் வட்டி வசூலிக்கின்றனர். எனவே கூட்டுறவு வங்கிகள் மூலம் குறைந்த வட்டிக்கு கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயி சந்திரன் கூறியதாவது:–
பெரியாறு தண்ணீர் சிவகங்கை மாவட்ட விவசாயத்திற்கு இதுவரை தரப்படவில்லை. இதனால் இதை நம்பியுள்ள 135 கண்மாய்கள் தண்ணீர் இன்றி உள்ளன. எனவே உடனடியாக தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதை தொடர்ந்து மற்ற விவசாயிகள், தற்போது மழைக்காலம் தொடங்க உள்ளதால் தொடக்க கூட்டுறவு வங்கிகளில் உரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
இதற்கு பதில் அளித்த கலெக்டர் ஜெயகாந்தன் பேசியதாவது:–
நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புக்கள் உடனடியாக அகற்றப்படும் பெரியாறு தண்ணீரை திறக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வனத்துறையினர் தங்கள் இடங்களில் யூகலிப்டஸ் மரத்திற்கு பதிலாக முந்திரி பயிரிட நடவடிக்கை எடுக்கும்படி தெரிவித்துள்ளோம். விவசாயிகளின் மற்ற கோரிக்கைகள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.