மீத்தேன் திட்டத்திற்கு ஆய்வு நடப்பதாக தகவல்: சிவகங்கை அருகே கிராம மக்கள் சாலை மறியல்
சிவகங்கை அருகே மீத்தேன் திட்டத்திற்கு ஆய்வு நடப்பதாக கருதிய கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சிவகங்கை,
சிவகங்கையை அடுத்த மலம்பட்டி என்ற கிராமத்தில் கடந்த சிலநாட்களுக்கு முன்பு 3 ஆழ்குழாய் போடும் லாரி மற்றும் டிராக்டர்கள் வந்தன. அதில் இருந்த 30 பேர் அங்குள்ள ஊராட்சிமன்ற கட்டிடம் அருகே உள்ள அரசு இடத்தில் ஆழ்குழாய் அமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதுபற்றி அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கேட்ட போது, மத்திய நிலத்தடி நீர்வாரியத்தில் இருந்து வந்துள்ளதாகவும், நிலத்தடி நீர்மட்டம் மற்றும் மண்ணின் தன்மை குறித்த பரிசோதிக்க உள்ளதாகவும் கூறப்பட்டதாம். மேலும் இதன் மூலம் வரும் தண்ணீரை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் தெரிவித்தனர். நேற்று வரை அவர்கள் சுமார் 600 அடிக்கு கீழே ஆழ்குழாய் அமைத்துள்ளனர்.
இந்தநிலையில் மீத்தேன் திட்டத்திற்காக ஆய்வு நடத்தப்படுவதாக கிராமத்தில் தகவல் பரவியது. இதையடுத்து நேற்று மாலை கிராம மக்கள் உடனடியாக ஆழ்குழாய் அமைப்பதை நிறுத்த கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த சிவகங்கை மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு முருகேசன், தாலுகா இன்ஸ்பெக்டர் சீராளன், தாசில்தார் ராஜா ஆகியோர் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் சமரசம் செய்தனர்.
அவர்கள் ஆழ்குழாய் போடுவதை உடனடியாக நிறுத்தப்பட்டு, அங்கிருந்து அனைவரும் சென்றால் தான் போராட்டத்தை கைவிடுவோம் என்று தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து அதிகாரிகள் ஆழ்குழாய் அமைக்கும் பணியை நிறுத்தி, அனைவரையும் அங்கிருந்து செல்லும்படி கூறினர். அதன்படி பணிகள் நிறுத்தப்பட்டு, அனைவரும் சென்றவுடன் கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் சிவகங்கை–மேலூர் சாலையில் சுமார் 45 நிமிடம் பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.