லாரியில் கடத்தி வந்த ரூ.7 லட்சம் மதுபாட்டில்கள் பறிமுதல்
வடபாதிமங்கலம் அருகே லாரியில் கடத்தி வந்த ரூ.7 லட்சம் மது பாட்டில்களை பறிமுதல் செய்து, லாரி மற்றும் மினி வேன் டிரைவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
சுந்தரக்கோட்டை,
திருவாரூர் மாவட்டம், வடபாதிமங்கலம் அருகே விக்கிரபாண்டியம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காரியமங்கலம் என்ற இடத்தில் லாரியில் கடத்தி வந்த மதுபாட்டில்களை சிலர், 2 மினி வேன்களில் ஏற்றி கொண்டு இருந்தனர். அப்போது போலீசார் வருவதை கண்டதும் லாரி மற்றும் வேன் டிரைவர்கள் தப்பி ஓடி விட்டனர். இதையடுத்து போலீசார் வாகனங்களை சோதனை செய்தபோது, அதில் 7,240 மதுபாட்டில்கள் இருந்தன.
அதன் மதிப்பு ரூ.7 லட்சம் என கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து விக்ரபாண்டியம் போலீசார், லாரி, 2 மினி வேன்கள், 7,240 மதுபாட்டில்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
மதுபாட்டில்களில் தமிழக அரசு ஸ்டிக்கர் ஒட்டி இருந்ததாக கூறப்படுகிறது. அது வெளி மாநில மதுபாட்டில்களா? அல்லது போலி மது பாட்டில்களா? என திருவாரூர் மாவட்ட மதுவிலக்கு கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு குமார் விசாரணை நடத்தி வருகின்றார். அடுத்த மாதம் (அக்டோபர்) 2-ந் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அதிக விலைக்கு கள்ளச்சந்தையில் விற்பனை செய்ய கடத்தப்பட்ட மதுபாட்டில்களா? எனவும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் இதுகுறித்து விக்கிரபாண்டியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாரி மற்றும் மினி வேன் டிரைவர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.