சாலையில் நாற்று நட்டு பொதுமக்கள் போராட்டம்

சோழவந்தானில் சாலையில் நாற்று நட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2018-09-28 22:45 GMT

சோழவந்தான்,

சோழவந்தானில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி நடந்துவருகிறது. இதற்கான சர்வீஸ் சாலை முறையாக அமைக்காததால் ஆங்காங்கே சாலை குண்டும்குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டுனர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைகின்றனர்.இரவில் நடந்து செல்பவர்கள் தட்டித்தடுமாறும் நிலை உள்ளது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக மழைபெய்து வருவதால் சாலை சகதியாக மாறிவிட்டது. இதுகுறித்து பொதுமக்கள் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் இப்பகுதி மக்கள் கடந்த 6 மாத காலமாக பல போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்காததால் பொதுமக்கள் திரண்டு நேற்று சாலையில் நாற்றுநடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலையில் நாற்று நட்டு தங்களை கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பொதுமக்கள் கோ‌ஷமிட்டனர். போராட்டத்தில் பல்வேறு கட்சி பிரமுகர்களும் கலந்துகொண்டனர். இணைப்புச்சாலையை முறையாக போடவேண்டும்,அடிக்கடி ஏற்படும் மின்வெட்டை தடுக்க வேண்டும், கழிவுநீர் முழுமையாக கடக்க சாக்கடை வசதி செய்து தரவேண்டும். இரவு நேரங்களில் பொதுமக்கள் நடந்து செலவதற்கும், பஸ் நிற்பதற்கும் போதிய வசதிகள் செய்து தரவேண்டும். குடிநீர் குழாய் உடைந்து கழிவுநீர் குடிநீருடன் கலந்து வருவதை தடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

மேலும் செய்திகள்