மாவட்டம் முழுவதும் 400 மருந்து கடைகள் அடைப்பு

ஆன்லைனில் மருந்து விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்கக்கூடாது என்று வலியுறுத்தி தேனி மாவட்டம் முழுவதும் சுமார் 400 மருந்துக்கடைகளை அடைத்து மருந்தாளுனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-09-28 21:30 GMT
தேனி,

ஆன்லைனில் மருந்து விற்பனை செய்வதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கக்கூடாது என்று நாடு முழுவதும் மருந்தாளுனர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி நாடு முழுவதும் மருந்துக்கடைகள் முழு அடைப்பு போராட்டத்தில் நேற்று ஈடுபட்டன. தேனி மாவட்டத்தில் சுமார் மருத்துவமனைகளோடு சேர்ந்து சுமார் 100 மருந்துக்கடைகளும், தனியாக சுமார் 400 மருந்துக்கடைகளும் உள்ளன. 

இதில் மருத்துவமனைகளில் உள்ள கடைகளை தவிர்த்து மற்ற அனைத்து மருந்துக்கடைகளும் நேற்று முழு அடைப்பு போராட்டத்தில் பங்கேற்றன. அந்த வகையில் மாவட்டத்தில் சுமார் 400 மருந்துக்கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் பொதுமக்கள் மருந்துகள் வாங்க முடியாமல் பரிதவித்தனர். நோயாளிகளுக்கு டாக்டர்கள் பரிந்துரை செய்த மருந்துகளை வாங்க முடியாமலும், குழந்தைகளுக்கான மருந்து பொருட்களை வாங்க முடியாமலும் மக்கள் தவித்தனர்.

இதுகுறித்து தேனி மாவட்ட மருந்தாளுனர் சங்கத்தின் செயலாளர் காளிராஜ் கூறுகையில், ‘ஆன்லைனில் மருந்து விற்பனை செய்ய அனுமதி வழங்கக்கூடாது என்று மத்திய அரசை கண்டித்து இந்த ஒரு நாள் கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். ஆன்லைனில் மருந்து விற்பனை செய்வதால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். மருந்துக்கடைகளில் டாக்டர்களின் பரிந்துரை இல்லாமல் மருந்து வினியோகம் செய்யக்கூடாது. 

ஆனால், ஆன்லைனில் விற்பனை செய்யப்படும் போது டாக்டரின் பரிந்துரை இல்லாமல் மருந்துகளை வாங்கி பயன்படுத்தும் நிலைமை உருவாகும். தூக்க மாத்திரை, போதை மாத்திரை, கருக்கலைப்பு மாத்திரை போன்றவை விற்பனை செய்யப்பட வாய்ப்பு உள்ளது. இது நாட்டுக்கே ஆபத்தாக முடியும். எனவே, ஆன்லைனில் மருந்து விற்பனை செய்வதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்கக்கூடாது. தேனி மாவட்டத்தில் ஒரு நாளைக்கு சுமார் ரூ.2 கோடி அளவுக்கு மருந்துப் பொருட்கள் விற்பனையாகும்’ என்றார். 

மேலும் செய்திகள்