பாம்பு கடித்த தொழிலாளியை சிகிச்சைக்காக 4 கிலோ மீட்டர் தூரம் தொட்டிலில் தூக்கிச்சென்ற பொதுமக்கள்
பாம்பு கடித்த விவசாயியை சிகிச்சைக்காக 4 கிலோ மீட்டர் தூரம் தொட்டிலில் பொதுமக்கள் தூக்கிச்சென்றனர். இதனால் சாலை வசதி அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
டி.என்.பாளையம்,
சத்தியமங்கலம் அருகே உள்ள கடம்பூர் மலைப்பகுதிக்கு உள்பட்ட மாக்கம்பாளையம் குட்டையூரை சேர்ந்தவர் அசோகன். தொழிலாளி. இவரை சம்பவத்தன்று விவசாயியை பாம்பு ஒன்று கடித்தது. இதனால் அவர் அந்த கிராமத்தில் சிகிச்சை பெற்றார். ஆனால் உடல்நிலை தேர்ச்சி அடையவில்லை.
இதைத்தொடர்ந்து அவரை மேல் சிகிச்சைக்கு கொண்டு செல்ல பொதுமக்கள் முடிவு செய்தனர். ஆனால் அந்தப்பகுதியில் சாலை வசதி கிடையாது. கடம்பூர் மலைப்பகுதியில் கடந்த 1 மாதமாக பலத்த மழை பெய்து வருவதால் காட்டாற்று வெள்ளம் செல்கிறது. இதனால் வாகனங்கள் எதுவும் தற்போது வரமுடியாத சூழ்நிலை நிலவி வருகிறது.
இதைத்தொடர்ந்து அசோகனை தொட்டில் கட்டி சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மாக்கம்பாளையத்துக்கு கொண்டு செல்ல பொதுமக்கள் ஏற்பாடு செய்தனர். மேலும் அடர்ந்து வனப்பகுதி மற்றும் காட்டாற்று வெள்ளத்தை கடந்து செல்ல வேண்டும் என்பதால் 50 பேர் கொண்டு ஒரு குழுவாக சென்றனர். பின்னர் மாக்கம்பாளையம் சென்றதும், அங்கிருந்து ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் அவரை சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், கடம்பூர் மலைப்பகுதியில் இருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில் மாக்கம்பாளையம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்துக்கு உள்பட்ட குட்டையூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான குடும்பங்கள் உள்ளன. இந்தப்பகுதியில் சாலை வசதி இல்லை. மேலும் ஒரு அரசு பஸ் மற்றும் சில வாகனங்கள் மட்டும் வந்து செல்கிறது. இதில் மழைக்காலங்களில் வாகனங்கள் எதுவும் வராது. காரணம் காட்டாற்று வெள்ளம் செல்வதால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.
மாக்கம்பாளையம், குட்டையூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் யாராவது நோய் வாய்ப்பட்டால் சிகிச்சைக்காக ஈரோடு அல்லது சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்குதான் போக வேண்டும். ஆனால் சாலை வசதி இல்லாததால் பெரிதும் சிரமப்பட்டு வருகிறோம். கடம்பூர் மலைப்பகுதியில் யானை, சிறுத்தை, புலி, கரடி உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
இதனால் பாம்பு கடித்த அசோகனை சிகிச்சைக்காக அடர்ந்த வனப்பகுதி வழியாக அச்சத்துடன் கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே குட்டையூர் பகுதியில் சாலை வசதி ஏற்படுவத்துவதோடு காட்டாற்று வெள்ளத்தை கடக்கும் வகையில் பாலம் கட்டித்தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.