பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு: வேலூரில் ஆட்டோ கட்டணம் ‘திடீர்’ உயர்வு
பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருவதன் காரணமாக வேலூரில் ஆட்டோ கட்டணம் திடீரென உயர்ந்துள்ளது.
வேலூர்,
பெட்ரோல், டீசல் விலை தினமும் உயர்ந்து வருகிறது. பெட்ரோல் லிட்டர் ரூ.87 வரைக்கும், டீசல் லிட்டர் ரூ.79 வரைக்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையில் பின்னி பிணைந்துள்ள ஆட்டோ கட்டணமும் உயர்ந்து உள்ளது.
வேலூரில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் ஓடுகின்றன. அதில் ஷேர் ஆட்டோக்களில் எந்த இடத்தில்ஏறி எந்த இடத்தில் இறங்கினாலும் ரூ.10 கட்டணமாக வசூல்செய்யப்பட்டு வந்தது. தற்போது வேலூரில் ஆட்டோ கட்டணமும் திடீரென உயர்த்தப்பட்டு உள்ளது.
வேலூர் பழைய மற்றும் புதிய பஸ்நிலையங்களில் இருந்து கலெக்டர் அலுவலகம், சத்துவாச்சாரி வரை வழக்கமான 10 ரூபாய் கட்டணமே வசூல் செய்யப்படுகிறது. வள்ளலார் வரை 10 ரூபாயாக இருந்த கட்டணம் தற்போது 15 ரூபாயாகவும், ரங்காபுரம் வரையில் 15 ரூபாயில் இருந்து 20 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.
பழைய பஸ்நிலையத்தில் இருந்து காட்பாடிக்கு 15 ரூபாயாக இருந்த கட்டணம் தற்போது 20 ரூபாயாகவும், புதிய பஸ்நிலையத்தில் இருந்து 10 ரூபாயாக இருந்த கட்டணம் 15 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மேல்மொணவூருக்கு 10 ரூபாயில் இருந்து 15 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோன்று பாகாயத்திற்கு 10 ரூபாயில் இருந்து 15 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வாலும், ஆட்டோக்களுக்கான இன்சூரன்ஸ் தொகை கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளதாலும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக ஏ.ஐ.டி.யு.சி. ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் சிம்புதேவன் கூறினார். மேலும் ரூ.4,900- ஆக இருந்த இன்சூரன்ஸ் தொகை ரூ.8,500 வரை உயர்த்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.