கணக்கெடுப்பு பணி: கால்நடைகள் பற்றிய தகவல்களை விவசாயிகள் தெரிவிக்கலாம்

கணக்கெடுப்பில் கால்நடைகள் பற்றிய தகவல்களை தெரிவிக்கலாம் என்று விவசாயிகளுக்கு கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.;

Update: 2018-09-27 22:30 GMT
திருப்பூர்,

திருப்பூர் மாவட்டத்தில் வருகிற அக்டோபர் மாதம் 1-ந்தேதி முதல் டிசம்பர் 31-ந்தேதி வரை 20-வது கால்நடை கணக்கெடுப்புப்பணிகள் கையடக்க கணினி மூலம் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த பணியில் கால்நடை மருத்துவ பட்டதாரிகள், கால்நடை ஆய்வாளர்கள், பணி ஓய்வு பெற்ற கால்நடை மருத்துவ பட்டதாரிகள், கால்நடை ஆய்வாளர்கள், இளங்கலை அறிவியல் பட்டப்படிப்பு முடித்தவர்கள், தனியார் செயற்முறை கருவூட்டாளர்கள் ஆகியோர் ஈடுபடுத்தப்பட உள்ளார்கள். ஒரு கணக்கெடுப்பாளருக்கு கிராமப்பகுதியில் 4 ஆயிரத்து 500 குடியிருப்புகள் எனவும் நகரப்பகுதியில் 6 ஆயிரம் குடியிருப்புகள் எனவும் குறியீடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

5 கணக்கெடுப்பாளருக்கு ஒரு மேற்பார்வையாளர் எனவும், 8 மேற்பார்வையாளருக்கு ஒரு தணிக்கையாளர் எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நமது மாவட்டத்திற்கு என்று மொத்தம் 147 கணக்கெடுப்பாளர்கள், 30 மேற்பார்வையாளர்கள் மற்றும் 4 தணிக்கையாளர்கள் நிர்ணயிக்கப்பட்டு கால்நடை கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. அதற்காக கணக்கெடுப்பாளர்கள், மேற்பார்வையாளர்கள் மற்றும் தணிக்கையாளர்களுக்கு உரிய பயிற்சிகள் வழங்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

எனவே கால்நடை வளர்ப்போர் மற்றும் விவசாயிகள் தங்கள் கால்நடைகளின் விவரத்தை கணக்கெடுப்பாளர்களுக்கு விடுபாடின்றி தெரிவிக்க வேண்டும். பசு, எருமை, செம்மறி ஆடு, வெள்ளாடு, நாய், கோழி, பன்றி, குதிரை, மற்றும் இதர கால்நடைகள் விபரம் கணக்கெடுக்கப்பட உள்ளது. இந்த கணக்கெடுப்பை பொறுத்து நமது மாவட்டத்திற்கு தேவையான கால்நடைகளுக்கான மருத்துகள், தடுப்பூசிகள், அரசு நலத்திட்டங்கள் ஆகிவை பெறப்பட உள்ளது.

மேலும் தற்போதைய நிலையில் அழிந்து வரும் கால்நடைகள் விவரமும் சேகரிக்கப்பட்டு அதன் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். இந்த கணக்கெடுப்பில் கால்நடைகள் மட்டுமின்றி உபகரணங்கள் மற்றும் மீன் வளர்ப்பு விபரங்களும் சேகரிக்கப்பட உள்ளது. எனவே அனைத்து விவசாயிகளும் கால்நடை பராமரிப்பு துறையின் மூலம் நியமிக்கப்பட்டுள்ள கால்நடை கணக்கெடுப்பாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கி தங்களிடம் உள்ள கால்நடைகள் மற்றும் உபகரணங்கள் குறித்த முழு விவரத்தினை தெரிவிக்க வேண்டும்.

இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்