3 குழந்தைகளை கிணற்றில் தள்ளி கொன்று தாய் தற்கொலை

சேலம் அருகே குடும்ப பிரச்சினை காரணமாக 3 குழந்தைகளை கிணற்றில் தள்ளி கொன்று விட்டு தாய் தற்கொலை செய்து கொண்டார். இந்த பரிதாப சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

Update: 2018-09-27 21:45 GMT
பனமரத்துப்பட்டி,

சேலம் மாவட்டம் மல்லூர் அருகே நாழிக்கல்பட்டியை அடுத்துள்ள கொழிஞ்சிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 37). இவருடைய மனைவி ஜெயா (26). இவர்களுக்கு சுமித்தாஸ்ரீ (7), ஷாலினி (3) ஆகிய மகள்களும், 11 மாதத்தில் வெற்றிவேல் என்ற மகனும் இருந்தனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே குமாரமங்கலத்தில் தனியாருக்கு சொந்தமான கல் மாவு தொழிற்சாலையில் லட்சுமணன் மூட்டை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர் தினமும் சேலத்தில் இருந்து அங்கு வேலைக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில், நேற்று முன்தினம் ஜெயா மற்றும் அவரது குழந்தைகள் ஆகியோர் வீட்டில் இருந்து வெளியே சென்றவர்கள் அதன்பிறகு வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த லட்சுமணன், மனைவி மற்றும் குழந்தைகளை உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தில் உள்ள வீடுகளில் தேடி பார்த்தார். ஆனால் அவர்கள் எங்கு சென்றார்கள்? என்ற விவரம் ஏதும் தெரியவில்லை. இதைத்தொடர்ந்து மனைவி மற்றும் குழந்தைகளை காணவில்லை என்று மல்லூர் போலீசில் லட்சுமணன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இதனிடையே, நாழிக்கல்பட்டியில் இருந்து அரியானூர் செல்லும் கொழிஞ்சிப்பட்டி கிராமத்தில் உள்ள ஒருவரது விவசாய கிணற்றில் நேற்று மாலை 2 குழந்தைகள் பிணமாக மிதப்பதாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், மல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுதேவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், சேலத்தில் இருந்து தீயணைப்பு வீரர்களும் வரவழைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் பொதுமக்கள் உதவியுடன் கிணற்றில் இறங்கி தண்ணீரில் மிதந்த 2 குழந்தைகளின் உடல்களை மீட்டனர்.

அப்போது, அவர்கள் காணாமல்போன லட்சுமணனின் மகள் ஷாலினி மற்றும் மகன் வெற்றிவேல் என்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரின் உடல்களை பார்த்து லட்சுமணன் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இதைத்தொடர்ந்து ஜெயா மற்றும் மற்றொரு மகள் சுமித்தாஸ்ரீ ஆகியோரின் கதி என்ன? என்பதை அறிய தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி தேடினர்.

பின்னர், சிறிது நேரத்தில் இறந்த நிலையில் ஜெயாவின் உடலும், அதன்பிறகு அவரது மகள் சுமித்தாவின் உடலும் மீட்கப்பட்டன. கணவருடன் ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக ஜெயா, 3 குழந்தைகளையும் கிணற்றில் தள்ளி கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்திருப்பது போலீஸ் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து 4 பேரின் உடல்களை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தற்கொலை செய்து கொண்ட ஜெயாவிற்கு வேறு ஒருவருடன் பழக்கம் இருந்து வந்ததாகவும், அவர் அடிக்கடி செல்போனில் பேசி வந்ததாகவும் கூறப்படுகிறது. இதுபற்றி அறிந்த லட்சுமணன், தனது மனைவியை கண்டித்துள்ளார். இதனால் விரக்தியில் இருந்து வந்த ஜெயா, தனது 3 குழந்தைகளையும் கிணற்றில் தள்ளி கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப பிரச்சினை காரணமாக கிணற்றில் 3 குழந்தைகளை தள்ளி கொன்றுவிட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் செய்திகள்