அரக்கோணம் அருகே தலைமை ஆசிரியையிடம் 6 பவுன் நகை பறிப்பு

அரக்கோணம் அருகே தலைமை ஆசிரியையிடம் 6 பவுன் நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2018-09-27 22:00 GMT
அரக்கோணம்,


அரக்கோணம், ஏ.என்.கண்டிகை பகுதியை சேர்ந்தவர் லோகய்யன். இவரது மனைவி கோமளா (வயது 48). இவர், அரக்கோணம் அருகே உள்ள கணபதிபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். நேற்று பள்ளியில் சிறப்பு வகுப்பை முடித்துவிட்டு பகல் 1 மணி அளவில் மொபட்டில் அரக்கோணத்தில் உள்ள வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

அரக்கோணம் - சேந்தமங்கலம் சாலையில் உள்ள கண்டிகை கிராமம் அருகே சென்றபோது, மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் திடீரென கோமளாவின் கழுத்தில் கிடந்த நகையை பறித்து உள்ளனர். அப்போது கோமளா மொபட்டை வலது கையால் பிடித்து கொண்டு இடது கையால் நகையை பிடித்து கொண்டார். இதனால் மர்ம நபர் கையில் பாதி நகையும், கோமளாவின் கையில் பாதி நகையும் இருந்தது.

இதனையடுத்து கோமளா மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். பின்னர் மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு பின்னால் அமர்ந்து இருந்த நபர் இறங்கி சென்று கையில் இருந்த சாவி கொத்தை வைத்து கோமளாவின் தலையில் அடித்தார். அப்போது அருகில் இருந்த பொதுமக்கள் ஓடி வந்தனர். அதற்குள் மர்ம நபர்கள் கோமளா கையில் இருந்த நகையையும் பறித்து கொண்டு 6 பவுன் நகையுடன் தப்பி சென்றனர்.

பொதுமக்கள் கோமளாவை மீட்டு சிகிச்சைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த அரக்கோணம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாத்துரை வழக்குப்பதிவு செய்தார். மேலும் மர்ம நபர்களை பிடிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அண்ணாத்துரை, மகாலிங்கம் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, மர்ம நபர்களை தேடி வருகின்றனர். 

மேலும் செய்திகள்