தென்காசியில் திருட்டு வழக்கில் 3 வாலிபர்கள் கைது 10 பவுன் நகை- 4 எல்.இ.டி. டி.வி.க்கள் மீட்பு
தென்காசியில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 10 பவுன் நகை, எல்.இ.டி. டி.வி.க்கள் மீட்கப்பட்டன.
தென்காசி,
தென்காசியில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 10 பவுன் நகை, எல்.இ.டி. டி.வி.க்கள் மீட்கப்பட்டன.
பணம் கேட்டு மிரட்டல்
தென்காசியை சேர்ந்தவர் ஜமால் மைதீன். இவர் தென்காசி அருகே இலஞ்சி விலக்கு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த 3 பேர் ஜமால் மைதீனிடம் கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டினர். அவர் தன்னிடம் பணம் இல்லை என்றதும் அங்கிருந்து 3 பேரும் சென்றுவிட்டனர். இதுபற்றி தென்காசி போலீசில் அவர் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், செங்கோட்டை விசுவநாதபுரம் பாரதிநகரை சேர்ந்த நூர்தீன் மகன் அஜி என்ற அமீர் காஜா ஷெரீப் (வயது 27), செங்கோட்டை மேலூர் கீழ பள்ளிவாசல் தெருவை சேர்ந்த பீர் முகம்மது மகன் முஸ்தபா கமால் (28), செங்கோட்டை மேலூர் கே.சி.ரோடு பகுதியை சேர்ந்த முகம்மது இஸ்மாயில் மகன் காதர் மைதீன் (27) ஆகியோர் என்பதும், தென்காசி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நடந்த பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்பு உடையவர்கள் என்பதும் தெரியவந்தது.
3 பேர் கைது
பின்னர் இதுபற்றி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர்கள் மாரிசெல்வி, சிலுவை அந்தோணி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து அமீர் காஜா ஷெரீப் உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்தார். மேலும் அவர்களிடம் இருந்து 10 பவுன் நகைகள், ½ கிலோ வெள்ளி மற்றும் 4 எல்.இ.டி. டி.விக்கள் மீட்கப்பட்டன. மேலும் அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.