காதலிக்க மறுத்ததால் மாணவியுடன் ஜோடியாக இருக்கும் புகைப்படம் முகநூலில் வெளியீடு தொழிலாளி கைது

காதலிக்க மறுத்ததால் மாணவியுடன் ஜோடியாக இருக்கும் புகைப்படத்தை முகநூலில் வெளியிட்ட கட்டிட தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Update: 2018-09-27 22:15 GMT
பொன்மலைப்பட்டி,

திருச்சி ஏர்போர்ட் பகுதி திலகர் தெருவை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. இவரது மகன் அஜித்குமார்(வயது 21). கட்டிட தொழிலாளி. அஜித்குமார் எப்போதும் டிப்-டாப்பாக உடையணிந்து பல்சர் மோட்டார் சைக்கிளில் வலம் வருவார். இதனால், அவரை அனைவரும் பல்சர் அஜித்குமார் என்றுதான் அழைப்பார்கள்.

17 வயது இளம்பெண் ஒருவர், திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரி ஒன்றில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். அஜித்குமாருக்கு அந்த மாணவியுடன் பழகும் வாய்ப்பு கிடைத்துள்ளது. நட்பு ரீதியிலான இந்த பழக்கத்தால் இருவரும் செல்போனில் ‘செல்பி’ எடுத்து கொண்டதாக தெரிகிறது. ஒரு கட்டத்தில் அஜித்குமார் மாணவி மீது காதல் வயப்பட்டுள்ளார். உடனே அந்த மாணவியிடம், நான் உன்னை காதலிக்கிறேன் என கூறி இருக்கிறார். அதற்கு மாணவியோ, “உன்னுடன் நட்புரீதியாகவே பழகி வந்தேன். காதலிக்கும் எண்ணம் இல்லை. கல்லூரி படிப்பை நான் மேலும் 2 ஆண்டுகள் படித்து நிறைவு செய்ய வேண்டும்” என கூறினார்.

இது அஜித்குமாருக்கு வேதனையையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் கடந்த 25-ந்தேதி அஜித்குமார் தனது முகநூல்(பேஸ்புக்) பக்கத்தில் கல்லூரி மாணவியுடன் ஜோடியாக இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டதாக கூறப்படுகிறது.

முகநூலில் அஜித்குமாருடன் ஜோடியாக இருக்கும் படத்தை பார்த்த கல்லூரி மாணவி அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து தனது சகோதரரிடம் மாணவி கூறி இருக்கிறார். உடனே, அவர் அஜித்குமாரை சந்தித்து கண்டித்ததுடன் உடனடியாக முகநூலில் இருந்து பதிவை நீக்குமாறு அறிவுறுத்தி உள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த அஜித்குமார், கல்லூரி மாணவியின் சகோதரரை அவதூறாக பேசி கொலை மிரட்டலும் விடுத்ததாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இதுகுறித்து மாணவி பொன்மலை அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் அஜித்குமார் மீது போக்சோ மற்றும் கொலை மிரட்டல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை இன்ஸ்பெக்டர் கலைவாணி கைது செய்தார். பின்னர் அவர் திருச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் செய்திகள்