கோவில்பட்டியில் விபத்து வழக்கில் இழப்பீடு வழங்காத அரசு பஸ் ஜப்தி

கோவில்பட்டியில் விபத்து வழக்கில் இழப்பீடு வழங்காததால், அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.

Update: 2018-09-27 22:00 GMT
கோவில்பட்டி, 

கோவில்பட்டியில் விபத்து வழக்கில் இழப்பீடு வழங்காததால், அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.

சுமை தூக்கும் தொழிலாளி

கோவில்பட்டியை அடுத்த இலுப்பையூரணியைச் சேர்ந்தவர் பேச்சிமுத்து. இவருடைய மகன் அய்யனார் (வயது 25). சுமை தூக்கும் தொழிலாளியான இவர் கடந்த 15-4-2009 அன்று சைக்கிளில் வேலைக்கு புறப்பட்டு சென்றார். கோவில்பட்டி-கடலையூர் ரோட்டில் சென்றபோது, எதிரே வந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக சைக்கிளில் மோதியது. இதில் அய்யனார் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து அய்யனாரின் தாயார் முத்துலட்சுமி, அரசு போக்குவரத்து கழகத்திடம் இழப்பீடு கேட்டு, கோவில்பட்டி சப்-கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

அரசு பஸ் ஜப்தி

கடந்த 13-12-2016 அன்று வழக்கை விசாரித்த நீதிபதி, அரசு போக்குவரத்து கழகம் ரூ.3 லட்சத்து 53 ஆயிரத்து 400-யை இழப்பீடாக முத்துலட்சுமிக்கு வழங்க உத்தரவிட்டார்.

ஆனால் அரசு போக்குவரத்து கழகம் இழப்பீடு வழங்கவில்லை. இதையடுத்து வட்டியுடன் சேர்த்து ரூ.5 லட்சத்து 95 ஆயிரத்து 203-யை இழப்பீடாக வழங்குமாறு முத்துலட்சுமி, கோவில்பட்டி சப்-கோர்ட்டில் நிறைவேற்றுதல் மனு தாக்கல் செய்தார்.

கடந்த 14-ந் தேதி வழக்கை விசாரித்த சப்-கோர்ட்டு நீதிபதி பாபுலால், அரசு போக்குவரத்து கழகம் இழப்பீடு வழங்காததால், அரசு பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். அதன்படி கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து மதுரைக்கு புறப்பட தயாராக இருந்த அரசு பஸ்சை கோர்ட்டு ஊழியர் சங்கரநாராயணன் ஜப்தி செய்து, கோர்ட்டு வளாகத்தில் நிறுத்தினார்.

மேலும் செய்திகள்