குன்னூர் அருகே ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம் உரிமையாளர்கள் சாலை மறியல் முயற்சி

குன்னூர் அருகே ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உரிமையாளர்கள் சாலைமறியலில் ஈடுபட முயன்றனர்.;

Update: 2018-09-27 22:45 GMT
குன்னூர்,

குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வழியில் உள்ளது காட்டேரி. இங்கிருந்து மஞ்சூர், கொலக்கம்பை, ஆர்செடின் பகுதிகளுக்கு சாலை செல்கிறது. காட்டேரி சந்திப்பு பகுதியில் இருந்து சாலையோரத்தில் நெடுஞ்சாலைத்துறை இடத்தை ஆக்கிரமித்து 22 கடைகள் வைக்கப்பட்டு இருந்தன. இதற்கிடையே கடையை காலி செய்ய நெடுஞ்சாலைத்துறை சார்பில் கடை உரிமையாளர்களுக்கு பலமுறை நோட்டீசு வழங்கப்பட்டது. ஆனால் காலி செய்யவில்லை.

இந்த நிலையில் நேற்று மாலை 3.30 மணியளவில் உதவி கோட்ட பொறியாளர் பாரிஜாதம் தலைமையிலான அதிகாரிகள் ஆக்கிரமிப்பு கடைகளை போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றினர். இந்த நடவடிக்கையில் காட்டேரி தபால் அலுவலக கட்டிடமும் தப்பவில்லை. ஆனால் அங்கு நகராட்சி கட்டிடத்தில் செயல்படும் ரேஷன் கடை மட்டும் அகற்றப்படாமல் இருந்தது.

அதனை அகற்ற போவதாக நெடுஞ்சாலைத்துறையினர் நகராட்சி நிர்வாகத்துக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் நகராட்சி அதிகாரிகள் யாரும் அங்கு வரவில்லை. எனவே முறைப்படி நகராட்சி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்து, அந்த கட்டிடத்தை இடிக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு அகற்றப்பட்ட கடைகளின் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் ரேஷன் கடைக்கு அடுத்துள்ள கடைகளை அகற்ற முயன்றபோது உரிமையாளர்கள் பொக்லைன் எந்திரம் மீது ஏறி நின்று கண்டன கோஷங்களை எழுப்பினர். அப்போது போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் தங்களது கடைகள் அகற்றப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், நகராட்சி கட்டிடத்தை உடனடியாக இடிக்க வலியுறுத்தியும் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். உடனே அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் மூலம் அந்த கட்டிடத்தை இடித்து அகற்றினர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

மேலும் செய்திகள்